Published : 06 Jul 2023 04:23 PM
Last Updated : 06 Jul 2023 04:23 PM
விழுப்புரம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற திண்டிவன திருமண விழாவில் கலந்துகொண்ட அதிமுக நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
திண்டிவனத்தில் நேற்று ஸ்ரீராம் அறக்கட்டளையானது 39 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வைத்து நடத்தி வைத்தது. அப்போது விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், ஸ்ரீராம் பள்ளியின் தாளாளருமான எஸ்.முரளி (எ) ரகுராமன், அவரது மகன்களான பாஜக நிர்வாகியுமான ஹரிகிருஷ்ணன், தென்கோடிப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜசேகர், மனைவி மல்லிகா என குடும்பத்தோடு பங்கேற்றனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை அருகே அதிமுக நிர்வாகி முரளி என்கிற ரகுராமன் உள்ள புகைப்படம் சமுக வலைதளம், எழுத்து மற்றும் காட்சி ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து எஸ்.முரளி (எ) ரகுராமனை அதிமுகவில் இருந்து நீக்கியதாக கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.
அதாவது, அதிமுக கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்கு முறை குலையும் வகையிலும் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் எஸ்.முரளி (எ) ரகுராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முரளி என்கிற ரகுராமன் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT