Published : 06 Jul 2023 03:56 PM
Last Updated : 06 Jul 2023 03:56 PM

“உங்கள் மனைவி இறந்துவிட்டதால் ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம்” - குடும்பத் தலைவருக்கு அதிர்ச்சி தந்த தஞ்சை அதிகாரிகள்

மனைவியுடன் பாலச்சந்திரன்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உயிரிழந்ததாக ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்பட்ட தனது மனைவியின் பெயரை சேர்க்க வேண்டும் என்று அவரது கணவர், அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

திருவிடைமருதூர் வட்டம், விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (53). தனியார் பேருந்து ஓட்டுநரான இவருக்கு மாற்றுத் திறனாளியான அமுதா (45) என்ற மனைவியும், 9-ம் வகுப்பு படிக்கும் சோலையப்பன் என்ற மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் திவ்யாபிரியா என்ற மகளும் உள்ளனர்.

அமுதா மாற்றுத் திறனாளியாக இருப்பதால், ரேஷன் கடைக்குச் சென்று பொருட்களை வாங்க முடியாததால், பாலச்சந்திரன் தான் அனைத்து பொருட்களையும் வீட்டுக்கு வாங்கி வருவது வழக்கம். இந்நிலையில், அண்மையில், பாலச்சந்திரன் பணி நிமித்தமாக வெளியூர் சென்றதால், அமுதா அங்குள்ள ரேஷன் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கச் சென்றார். ஆனால், அங்குள்ள ஊழியர், “உங்களது கைரேகை பதியவில்லை” என பொருட்கள் வழங்க முடியாது என்று திருப்பி அனுப்பியுள்ளார். இது குறித்து கணவரிடம் அமுதா கூறாமல் இருந்துவிட்டார்.

இந்நிலையில், கடந்த மாதம் தனது மகனைப் பள்ளிக்குச் சேர்ப்பதற்காக ரேஷன் அட்டை தேவைப்பட்டதால், அவரது பெயரை சேர்ப்பதற்காக திருவிடைமருதூர் வட்ட வழங்கல் அலுவலகத்துக்குச் சென்றார். ஆனால், அங்குச் சென்று விசாரித்தபோது, தனது மனைவியின் பெயர் ரேஷன் அட்டையில் இல்லாதது குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்ட போது, உங்களது மனைவி உயிரிழந்துவிட்டதால், பெயரை நீக்கி விட்டோம் எனப் பதில் கூறியுள்ளார்கள்.

இதனையடுத்து, தனது மகன் பெயரைச் சேர்த்து விட்டு, மனைவி பெயரைச் சேர்க்க அலுவலகத்துக்கு தற்போது பாலச்சந்திரன் அலைந்து வருகின்றார். எனவே, மாவட்ட நிர்வாகம் எனது மனைவியின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாலச்சந்திரன் கூறியது: “எனது தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதன் பிறகு அண்மையில் எங்களது சகோதர்கள் அனைவரும் தனித்தனியாக ரேஷன் கார்டு வாங்கினோம். ஆனால், அந்த கார்டில் எனது தாய் பெயரில்லாமல், அவரது புகைப்படம் மட்டும் உள்ளது. இதேபோல் அந்தக் கார்டில் மனைவி பெயரும் இல்லை. இது தொடர்பாக திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ளவர்களிடம் கேட்டபோது, உங்களது மனைவி உயிரிழந்துவிட்டார். அதனால் ரேஷன் கார்டிலிருந்து நீக்கிவிட்டோம் எனப் பதில் கூறுகின்றனர்.

இதனால் சந்தேகமடைந்த நான், 1967 என்ற இலவச எண் சேவைக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது, உங்களது மனைவி அமுதா உயிரிழந்துவிட்டார் என அவர்களும் பதில் கூறுகின்றனர். இதில் பேசிய ஆடியோ பதிவும் ஆதாரத்துக்காக என்னிடம் உள்ளது. இது தொடர்பாக அலுவலகத்துக்கு கடந்த 20 நாட்களாக அலைந்தும் பலனில்லாமல் உள்ளது.

மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் குடும்பம் நடத்துவதால், ஓட்டுநர் பணிக்குச் சென்று விட்டு, மீண்டும், இதற்கு அலைவதற்கே மிகவும் வேதனைக்குள்ளாகி வருகின்றது. எனவே, எனது ரேஷன் கார்டில், எனது புகைப்படத்தைப் அச்சிட்டு, மாற்றுத் திறனாளியான எனது மனைவியின் பெயரைச் சேர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருவிடைமருதூர் வட்ட வழங்கல் அலுவலர் மனோரஞ்சிதம் கூறியது: ”அமுதா உயிரிழந்ததாகக் கூறப்படுவது குறித்து, அவரது கணவரிடம், அவரது தாயின் ஆதார் கார்டை கேட்டுள்ளோம். அமுதாவின் ஆதார் கார்டுக்கு பதிலாக இவரது தாயின் ஆதார் கார்டு எண்ணை மாற்றி வழங்கியிருந்தால், இதுபோன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அமுதாவின் பெயரை நீக்கியது சென்னையிலுள்ள தலைமை அலுவலகம் தான். அவரது கணவர் பாலச்சந்திரனிடம், அவரது தாயின் ஆதார் கார்டு மற்றும் இறப்புச் சான்றிதழ் கேட்டுள்ளோம், அதனை ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக ரேஷன் கார்டில் அமுதாவின் பெயரைச் சேர்த்து வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x