Published : 06 Jul 2023 06:23 PM
Last Updated : 06 Jul 2023 06:23 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் கடலோரத்தை ஒட்டியுள்ள, நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளான 7 தொகுதிகளில் சிவப்பு ரேஷன் கார்டுள்ள ஏழை மக்கள் 35 ஆயிரம் பேருக்கு நாள்தோறும் சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் (ஒரு கேன்) தண்ணீரைத் தர அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
இதை அவர்கள் சுத்திகரிப்பு நிலையங்களில் இலவசமாக பெற விரைவில் அடையாள அட்டை தரப்படவுள்ளது. கடலோர மாநிலமான புதுச்சேரியில் நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. சுற்றுலா நகரமான இப்பகுதியில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதனால் நகரப் பகுதியில் உள்ள பல தொகுதிகளில் உள்ள தண்ணீர் குடிக்க உகந்ததாக இல்லை.
இங்குள்ள தண்ணீரைப் பயன்படுத்தினால் சிறுநீரக நோய்கள் வரும் அபாயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து புதுவை பொதுப்பணித்துறை மூலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த சுத்திகரிப்பு நிலையங்களை பராமரிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்போது புதுச்சேரி முழுவதும் 68 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 20 லிட்டர் தண்ணீர் ரூ.7க்கு தரப்படுகிறது. அதேபோல் நகரப்பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததால் கிராமங்களில் இருந்து நகரப் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வர முயற்சி நடந்தது.
ஆனால் கிராமப் பகுதிகளில் தண்ணீர் எடுக்க மக்கள் அனுமதிக்காததால் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நெய்வேலியில் இருந்து புதுச்சேரிக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் கொண்டு வந்து குடிநீர் தேவையைத் தீர்க்க திட்டமிட்டு, அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. சுமார் 10 எம்எல்டி நீரை கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில் கடலோரம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் உள்ள சிவப்பு ரேஷன் அட்டை உள்ள ஏழை மக்களுக்கு முதல் கட்டமாக நாள்தோறும் ஒரு கேன் தண்ணீர்( 20 லிட்டர்) இலவசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டதற்கு, "புதுவை சட்டப்பேரவையில் ஏற்கெனவே அறிவித்தது போல கடலோரத்தை ஒட்டிய ‘ரெட் சோன்’ பகுதியில் வசிக்கும் சிவப்பு ரேஷன் கார்டு உள்ள ஏழை மக்களுக்கு இது வழங்கப்படும். முதல் கட்டமாக கடலோர பகுதிகளில் உள்ள 7 தொகுதிகளில், முறையே 5 ஆயிரம் பேர் வீதம் மொத்தம் 35 ஆயிரம் பேருக்கு தரவுள்ளோம்.
அதற்கான அடையாள அட்டையை காண்பித்து தினமும் ஒரு கேன் தண்ணீரை குடிநீர் சுத்திகரிப்பு மையங்களில் இலவசமாக பெறலாம். இம்மாதத்துக்குள் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் மேலும், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களை அதிகப்படுத்தவுள்ளோம். அதைத் தொடர்ந்து கடலோர தொகுதிகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் குடிநீர் இலவசமாக தருவது விரிவாக்கம் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT