Published : 06 Jul 2023 12:33 PM
Last Updated : 06 Jul 2023 12:33 PM
சென்னை: ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் தாமதமாகிக்கொண்டிருக்கிறது என்று உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டி உள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் சில பல்கழைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றை நிரப்ப சட்டப்படி தமிழக அரசு குழு அமைத்திருக்கிறது. எனினும், அந்த குழுவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் தராமல் இருக்கிறார். துணை வேந்தர்கள் தேடுதல் குழுவில் சட்டப்படி சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர், தமிழக அரசு உறுப்பினர் ஒருவர், ஆளுநர் தரப்பில் ஒருவர் என 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் ஒரு உறுப்பினரை சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்துகிறார். அதற்கு பல்கலைழக்கழக சட்டத்தில் இடம் இல்லை. தேர்வுக் குழுவில் ஆளுநர் தனது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக இது போன்று வலியுறுத்துகிறார்.
பல்கலைழக்கழக விவகாரங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பல்கலைக்கழங்களில் தவறு ஏதும் இருப்பின் அமைச்சர் என்ற முறையில் என்னிடம் தெரிவித்திருக்கலாம் அல்லது துறையின் செயலரிடம் தெரிவித்திருக்கலாம். மாறாக, பத்திரிகைகளில் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏன் வருகிறது? ஏனெனில், ஆளுநர் அரசியல் செய்கிறார்.
சிண்டிகேட் கூட்டத்தை தலைமை செயலகத்தில் நடத்தக் கூடாது என்று ஆளுநர் கூறுகிறார். ஆனால், நாகை மாவட்டத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழக மாணவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்து பட்டங்களை பெற வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார். இப்படி கூறிய ஆளுநர், சிண்டிகேட் கூட்டத்தை பற்றி பேச தனக்கு தகுதி உள்ளதா என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
பல்கலைக்கழங்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை என்று ஆளுநர் கூறுகிறார். ஆனால், பல்கலைக்கழகங்களுக்கு எல்லா விதமான அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. என்னுடைய தலைமையில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பதிவாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநர் என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும். கல்வித்துறை மட்டுமல்லாமல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மதிக்காமல் எல்லா துறைகளிலும் ஆளுநர் தலையிடுகிறார்." இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT