Published : 06 Jul 2023 04:22 AM
Last Updated : 06 Jul 2023 04:22 AM
சென்னைஊழல் வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு ஆணை வழங்க வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள 13 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் குட்கா விநியோகம் செய்பவர்களிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு கோரியது. இசைவு ஆணை கோரும் சிபிஐயின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 2022நவ.12-ம் தேதி மாநில அமைச்சரவை அனுப்பியது. துரதிர்ஷ்டவசமாக இதுவரை இந்த கடிதம்தொடர்பாக எவ்வித பதிலும்தங்களிடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை. அதனால், இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
வணிக வரி, பதிவுத் துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி,போக்குவரத்து துறை முன்னாள்அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணை தொடங்க ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்குநரகம் அனுமதி கோரியது. இந்த கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து, அதற்கான கடிதங்களை கடந்த 2022 செப்.12 மற்றும் கடந்த மே 15 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பியது. இவையும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.
முந்தைய அதிமுக அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணை தொடங்க தேவையான இசைவை ஆளுநர் இதுவரை வழங்கவில்லை.
இதுதவிர, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் ஒப்புதலுக்காக தங்களிடம் நிலுவையில் உள்ளன. இவற்றில் 2 மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
எனவே, மேலே குறிப்பிட்டுள்ள முக்கிய கோப்புகள், மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாமதம் செய்யாமல், ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்க இசைவு ஆணையையும், மசோதாக்களுக்கு ஒப்புதலையும் வழங்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT