Published : 06 Jul 2023 06:53 AM
Last Updated : 06 Jul 2023 06:53 AM
சென்னை: தமிழகத்துக்கு அரிசிக்கு பதில் கூடுதலாக 15 ஆயிரம் டன் கோதுமையை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் தமிழக உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, செயலர் டி.ஜகந்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: வரும் 2023-24 காரிப் பருவத்தின் கொள்முதலை இந்தாண்டு செப்.1-ம் தேதி முதல் தொடங்க அனுமதிக்க வேண்டும். அதே போல், அரிசிக்கான மானியத் தொகையில் கடந்தாண்டுகளுக் கான நிலுவையை வழங்க வேண் டும்.
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 98.15 சதவீதம் கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெறுகிறது. இதனால், உரிய குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவது உறுதி செய்யப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
கோதுமை ஒதுக்கீடு குறைப்பு: தமிழகத்தில் கோதுமை நுகர்வு அதிகரித்துள்ளது. இங்கு கோதுமை உற்பத்தி இல்லாததால் கோதுமையின் தேவைக்காக பிற மாநிலங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மே 2022 வரை மத்திய அரசிடமிருந்து மாதம் ஒன்றுக்கு 30,648 டன் கோதுமையை ஒதுக்கீடாக பெற்றோம். ஆனால் தற்போது கடந்தாண்டு ஜூன் முதல் 8,532 டன் கோதுமை மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் கூடுதலாக மாதம் 15 ஆயிரம் டன் கோதுமையை அரிசிக்குப் பதில் ஒதுக்க வேண்டும். இல்லாவிட்டால் திறந்தவெளிச் சந்தை விற்பனைத் திட்டத்தின்கீழ் வழங்க வேண்டும். தமிழகத்தில் தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ ராகி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு போதிய அளவு ராகி மற்றும் சிறுதானியங்கள் வழங்கினால் இத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவோம்.
பொது விநியோகத் திட்டம், மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்துக்காக 60 ஆயிரம் டன் அரிசி தேவைப்படுகிறது. எனவே, திறந்த வெளிச்சந்தை விற்பனை திட்டத்தில் எங்களுக்கு 60 ஆயிரம் டன் அரிசி வழங்க வேண்டும். இவ்வாறுவழங்குவதால், வெளிச்சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்த இயலும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து தமிழகத்துக்கான நிலுவை மானியம் மற்றும் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களின் அளவை உயர்த்தி வழங்குதல் குறித்து சக்கரபாணி மனு அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT