Published : 06 Jul 2023 07:30 AM
Last Updated : 06 Jul 2023 07:30 AM
தாம்பரம்
தாம்பரம் சானடோரியத்தில் எஸ்கலேட்டர் பழுதுகாரணமாக முதியோர் உள்ளிட்டோர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
இதுகுறித்து இந்து தமிழ் திசை நாளிதழ் உங்கள் குரல் தொலைப்பேசி பதிவில் பி.அஜீத்குமார் என்ற வாசகர் கூறியதாவது:
தாம்பரம் சானடோரியத்தில் பொதுமக்களின் வசதிக்காக ஜிஎஸ்டி சாலையை கடக்கும் வகையில் எஸ்கலேட்டர் எனும் நகரும் மின்சார படிகளுடன் கூடிய நடைமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் சானடோரியம் ரயில் நிலையம் மார்க்கமாக ஏறுவதற்கு போடப்பட்டுள்ள நகரும் படிகள் பழுதானதால் அவை இயங்கவில்லை. இதனால், முதியவர்கள், பெண்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தினம் பல ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இடத்தில் நகரும் படிகள் பழுதாகி 3 மாதங்களுக்கும் மேல் ஆன நிலையில் அதைசரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.
குறிப்பாக சானடோரியத்தில் உள்ள நகரும் படிகளை மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதேபோல் சானடோரியம் ரயில் நிலையம், தாம்பரம் நீதிமன்றம், தாம்பரம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகம், கருவூல அலுவலகம் செல்வோர் அதிகம் பேர்பயன்படுத்துகின்றனர். சானடோரியத்தில் நகரும் படிகள், அடிக்கடி பழுதாவது தொடர் கதையாகிவிட்டது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தலையிட்டு நகரும் படிகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரியிடம் கேட்டபோது, எஸ்கலேட்டரில் ஒரு பக்கத்தில் உள்ள இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதற்குத் தேவையான உதிரிபாகம் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. உதிரி பாகம் வேண்டி சம்பந்தப்பட்ட எஸ்கலேட்டர் தயாரிப்பு நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அவை வந்தவுடன் பழுது நீக்கம் செய்து புதிய உதிரிபாகம் பொருத்தி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எஸ்கலேட்டர் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT