Published : 05 Jul 2023 11:27 PM
Last Updated : 05 Jul 2023 11:27 PM
கோவை: அணை மற்றும் அடிவாரப் பகுதிகளில் பெய்த மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. பில்லூர் அணையிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் கோவை மாநகரின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் 49.50 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கலாம்.
ஆனால், அணையின் பாதுகாப்பு காரணங்களுக்காக 45 அடி உயரம் வரை மட்டுமே கேரளா அரசால் தண்ணீர் தேக்கப்படுகிறது. எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாததால், சிறுவாணி அணையின் சமீபத்திய நீர்மட்டம் 1 அடிக்கும் கீழே சென்றது. இதனால் அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவும் குறைந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக சிறுவாணி அணைப் பகுதி மற்றும் அடிவார நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அதேபோல், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் கேரள மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. நூறு அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர் மட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு 73 அடியாக இருந்த நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நேற்று 81 அடியாகவும், இன்று (05-ம் தேதி) மாலை நிலவரப்படி 83 அடியாகவும் உயர்ந்துள்ளது.
கன மழை தொடரும் பட்சத்தில் இன்னும் இரண்டொரு நாளில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அணைக்கான தற்போதைய நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக உள்ளது. அதே நேரத்தில் அணையில் இருந்து தற்போது நீர் மின் உற்பத்தி பணிக்காக அதே அளவான, விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயரும் சூழல் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக சிறுவாணி அணைப்பிரிவு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறுவாணி அணையில் கடந்த 3-ம் தேதி நிலவரப்படி 0.62 அடி, கடந்த 4-ம் தேதி 0.72 அடி உயரத்துக்கு தண்ணீர் இருந்தது. மழை பெய்த காரணத்தால் இன்று (5-ம் தேதி) சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து அணையின் நீர்மட்டம் 0.79 என்ற அளவில் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி சிறுவாணி அணையில் 30 மி.மீட்டர் அளவுக்கும், அடிவாரப் பகுதியில் 48 மி.மீட்டர் அளவுக்கும் மழை பெய்துள்ளது. அதேபோல், இன்று காலை முதல் மாலை வரை அடிவாரப் பகுதியில் 25 மி.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இன்று முதல் அணைப்பகுதியில் தொடர்ச்சியாக மழை இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நேற்றைய நிலவரப்படி சிறுவாணி அணையில் இருந்து 36.50 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT