Published : 05 Jul 2023 05:23 PM
Last Updated : 05 Jul 2023 05:23 PM

பவார் Vs பவார் முதல் மருத்துவக் குழு அறிக்கை மீது தாய் அஜிஸா அதிருப்தி வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ ஜூலை 5, 2023

ஆளுநருக்கு சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம்: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணையை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஆளுநர் ரவிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: 3-வது நீதிபதி நியமனம்: அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கில் 3-வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவரி நீரை கர்நாடகம் உடனே வழங்க வலியுறுத்தல்: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக கர்நாடகம் வழங்க வேண்டி டெல்லியில் புதன்கிழமை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும், மேகேதாட்டு அணையினை கட்டக் கூடாது என்று வலியுறுத்தி கோரிக்கை மனுவினை அவர் வழங்கினார்.

“கர்நாடக முதல்வர், அமைச்சரை தமிழக அரசு கண்டிக்காதது ஏன்?”: இதனிடையே, “காவிரி நதிநீர் பிரச்சினை, மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அமைச்சரையோ, முதல்வரையோ தமிழக அரசு இதுவரை கண்டிக்காதது ஏன்?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மருத்துவக் குழு விசாரணை அறிக்கையில் அத்தனையும் பொய்’: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் துளிகூட திருப்தியே கிடையாது என்று தெரிவித்துள்ள அந்தக் குழந்தையின் தாய் அஜிஸா, “இந்த மருத்துவக் குழு விசாரணை அறிக்கையில் வந்துள்ள முடிவுகள் அத்தனையும் பொய்” என்று சாடியுள்ளார்.

முன்னதாக, அந்தக் குழந்தையின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் வலது கையை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று மருத்துவக் குழு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

பெட்ரோல் விலையை விஞ்சிய தக்காளி விலை: தக்காளி விலை உயர்வால் நாட்டு மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதுமே பரவலாக தக்காளி விலை அதிகரித்து வரும் சூழலில் ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தக்காளி விலை, பெட்ரோல் விலையைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி புலம்பி வருகின்றனர்.

“என்னை வில்லன் போல் சித்தரிப்பது அநீதி” - அஜித் பவார்: தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்திவிட்டதாக தன்னை சிலர் வில்லன் போல் சித்தரித்தால், அது அநீதி என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்பதை நிரூபிக்க இரு அணிகள் மும்பையில் புதன்கிழமை தனித்தனியாக கூடின. அஜித் பவார் தலைமையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் நான் ஐந்து முறை துணை முதல்வராக இருந்துவிட்டேன். எனக்கும் முதல்வராக வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. மகாராஷ்டிரா மக்களுக்காக நல்ல பல திட்டங்களை வகுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 53 பேரில் 31 பேர் அஜித் பவாருக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், அஜித் பவார் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்துக்கு உரிமை கோரவிருக்கிறார்.

இதனிடையே மறுபக்கம் தனது தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், "எங்களுக்கு ஒருபோதும் அதிகாரப் பசி இல்லை. நாங்கள் மக்கள் நலனுக்காக அரசியல் செய்ய விரும்புகிறோம்" என்று சரத் பவார் கூறியுள்ளார். மேலும் கட்சியும், சின்னமும் தன் பக்கமே இருப்பதாகவும் சரத் பவார் கூறியுள்ளார்.

ம.பி - பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் கைது: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடியின தொழிலாளி மீது சிறுநீர் கழித்த நபர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாகப் பேட்டியளித்த முதல்வர் சிவ்ராஜ் சவுகான், "கிரிமினல்களுக்கு சாதி, மதம், கட்சி என எதுவும் இல்லை. ஒரு கிரிமினல் எல்லா வகையிலும் கிரிமினல் மட்டுமே. இந்த நபர் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

இதனிடையே, மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த குற்றவாளியின் உடமைகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் அல்லது இடித்துத்தள்ளப்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

மோடி அரசுக்கு கார்கே எச்சரிக்கை: பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், விலையேற்றம் அதிகரித்து வருவது குறித்து மோடி அரசை விமர்சித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, உங்களின் வெற்று கோஷங்களுக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு மாதமாகியும் உரிமை கோரப்படாத 50 உடல்கள்: ஒடிசா ரயில் விபத்து நிகழ்ந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், இன்னும் 50-க்கும் மேற்பட்ட உடல்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன. பல குடும்பங்கள் தங்கள் உறவுகளின் உடல்களை அடையாளம் காண முடியாமல் தவிப்பதாகவும் தெரிய வருகிறது.

ஜப்பானில் மக்கள்தொகை பிரச்சினை: ஜப்பானில் 1986-க்குப் பின்னர் முதன்முறையாக குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் கீழே சரிந்துள்ளது என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x