Last Updated : 05 Jul, 2023 06:40 PM

1  

Published : 05 Jul 2023 06:40 PM
Last Updated : 05 Jul 2023 06:40 PM

கஞ்சா வழக்குகளில் பறிமுதல் வாகனங்களை விசாரணை முடியும் வரை வைத்திருக்க தேவையில்லை: உயர் நீதிமன்றம்

மதுரை: கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை விசாரணை முடியும் வரை வைத்திருக்க தேவையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நாகூர்கனி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'என் மீது 2018-ல் கஞ்சா கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனக்கு சொந்தமான ஜீப்பை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஜீப்பை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.செந்தில்குமார் வாதிடுகையில், ''கஞ்சா வழக்கில் மனுதாரர் 2வது குற்றவாளியாக உள்ளார். மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. வாகனத்தை விடுவிக்கக்கோரி விசாரணை நீதிமன்றத்தில் தான் மனு தாக்கல் செய்ய முடியும். கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை இடைக்காலமாக விடுவிக்க கோர முடியாது. போதை பொருள் கடத்தலின் போது பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் யாரும் உரிமை கோராததால் விசாரணை நீதிமன்றங்களிலும், காவல் நிலையங்களிலும் குவிந்து கிடக்கிறது. அந்த வாகனங்கள் பல ஆண்டுகளாக வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் சிதிலமடைந்து வருகிறது. இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: ''கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் மற்றும் சொத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சட்டத்திலும், உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளிலும் கூறப்பட்டுள்ளது. இதனை விசாரணை நீதிமன்றமும், விசாரணை அதிகாரிகளும் முறையாக பின்பற்றுவதில்லை. எனவே, போதை பொருள் கடத்தல் வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யும் போது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் உடனடியாக அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாகனத்தின் பதிவு எண், பதிவுச் சான்று உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் புகைப்படங்களாக விசாரணை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.

பறிமுதல் செய்யப்படும் வாகனத்தின் உரிமையாளர், காப்பீடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். வாகனம் எங்கு நிறுத்தப்பட்டுள்ளது, வாகனத்தின் எண், வாகன இஞ்சின் எண் ஆகியவற்றை புகைப்படம் எடுத்து பராமரிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்ச மற்றும் போதை பொருட்களை உடனடியாக ரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி அதன் சான்று விவரங்களை பாதுகாக்க வேண்டும். ரசாயன பகுப்பாய்வு சான்றுகள் பெற்றவுடன் போதை பொருளை அழிக்கும் குழுவிற்கு சான்றுகளையும் முழு விவரங்களையும் அனுப்பி போதைப் பொருட்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பறிமுதல் வாகனங்களை திரும்ப கேட்டு மனுத் தாக்கல் செய்தால், வழக்கின் தன்மையைப் பொறுத்து விசாரணை நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்.

பறிமுதல் வாகனங்களை விசாரணை முடியும் வரை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்பதை போதைத் தடுப்பு சட்டப்பிரிவு சொல்கிறது. இதனை பின்பற்ற வேண்டும். கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் பல வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளது என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். உரிமை கோரப்படாத வாகனங்கள் காவல் நிலையங்களில் உள்ளன.

எனவே, தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக போதைப் பொருள் கடத்தல் வழக்கில் உரிமை கோரப்படாத வாகனங்கள், உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்பட்ட வாகனங்களின் விபரங்களை இரு மாதங்களுக்க ஒருமுறை சேகரிக்க வேண்டும். அது தொடர்பாக 3 மாதங்களுக்கு ஒருமுறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் விசாரணை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x