Last Updated : 05 Jul, 2023 04:30 PM

7  

Published : 05 Jul 2023 04:30 PM
Last Updated : 05 Jul 2023 04:30 PM

“கர்நாடக முதல்வர், அமைச்சரை தமிழக அரசு கண்டிக்காதது ஏன்?” - அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை | கோப்புப் படம்

விழுப்புரம்: “காவிரி நதிநீர் பிரச்சினை, மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடக அமைச்சரையோ முதல்வரையோ இதுவரை கண்டிக்காதது ஏன்?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திண்டிவனத்தில் இன்று ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இந்நிகழ்வில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "பாரத பிரதமர் மோடி போபாலில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டில், ஒரு குடும்பத்தில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது எனக் கூறியிருந்தார். இதில் சில கட்சிகளின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம் அதில் தவறில்லை. உதாரணத்துக்கு, அதிமுக இருமொழி கொள்கையை ஆதரிக்கிறது, புதிய கல்விக் கொள்கையை பாஜக ஆதரிக்கிறது. வேற்றுமை எல்லா இடங்களிலும் உள்ளது.

வருகின்ற காலங்களில் பொது சிவில் சட்டத்தை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களும் இது குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்போது பொது சிவில் சட்டம் குறித்து தெரிந்து கொள்வார்கள். யாரையும் பிரிப்பதற்காக இல்லை. இரண்டு, மூன்று சட்டங்களை வைத்துக்கொண்டு நாட்டை ஒற்றுமையாக வைக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கும், குறிப்பாக இஸ்லாமிய பெண்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கூட நல்ல சட்டம். யாருக்கு எதிராக பொது சிவில் சட்டம் இருக்கப்போவது கிடையாது.

வருகின்ற வருகின்ற காலத்தில் அதிமுக நிலைப்பாடு மாறும் என நம்புகிறேன். அனைத்து கட்சிகளும் இணைந்து பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும். மேகேதாட்டு விவகாரத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு தமிழகத்துக்கு காவிரி இல்லை என கர்நாடகா சொல்லியுள்ளது. இதனால் தமிழகம் பாதிக்கப்படும். கர்நாடக துணை முதல்வர் தண்ணி கொடுக்க மாட்டேன் என சொல்வதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. இதற்காக திமுகவும், காங்கிரஸ் ஏன் கண்டிக்கவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வர் கர்நாடகா சென்றுவந்தால் பாஜக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். விவசாயின் மீது அக்கறை முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் இல்லை. இது எப்படி நலம் நான் சார்ந்த அரசாக இருக்க முடியும்?

தமிழகத்துக்கு கேரளாவும், கர்நாடகாவும் வஞ்சிக்கிறது. பி.ஜே.பி.யை பொறுத்தவரை தமிழகத்தில் தண்ணீர் வரவேண்டும் அதேசமயத்தில் மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு. தமிழகத்தின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேச வேண்டும்.

துரைமுருகனின் செய்தியாளர் சந்திப்பில் உப்பும் இல்லை, உரைப்பும் இல்லை. கர்நாடக அமைச்சரையோ முதல்வரையோ கண்டித்து தமிழக அரசு ஏன் இதுவரை அறிக்கை கொடுக்கவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழக விவசாய நிலங்களை திமுக அரசு விட்டுக் கொடுக்கிறதா?

தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஆளுநர் பதில் சொல்ல, ஆளுநர் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் அரசியல் பேசக் கூடாது. ஆளுநர் கடமையை மட்டுமே செய்ய வேண்டும். செய்தியாளரை ஆளுநர் சந்திப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும். இதை ஏன் திமுக புரிந்துகொள்ள மறுக்கிறது?

தக்காளி , வெங்காயம் விலை உயர்வுக்கு அனைவரும் போராட்டம் நடத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. விவசாய சட்டம் வந்திருந்தால் இதுபோன்ற விலை ஏற்றம் ஏற்படாது. எல்லா பொருட்களையும், இடைத்தரகர் இல்லாமல் விவசாயிகளும், கொள்முதல் நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் போட வேண்டும் என்பது முக்கியமானது” என்று அண்ணாமலை கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x