Published : 05 Jul 2023 05:21 PM
Last Updated : 05 Jul 2023 05:21 PM
கோவை: மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான மெட்ரோ ரயில் திட்டம் விரைவில் நிறைவேறுகிறது. கோவையில் மொத்தம் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது.
தென்னிந்தியாவின் முக்கிய தொழில் நகரமாகவும் திகழும் கோவைக்கு, கல்வி, தொழில், வேலை வாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோவையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகளும் செல்கின்றன.
கோவையில் பொதுப் பயன்பாடு மற்றும் தனிப் பயன்பாடு வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கோவையில் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சில சாலைகளை தவிர்த்து பெரும்பாலான சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. தமிழக அரசு சார்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அவிநாசி சாலை, உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறம் மேற்கொள்ளப்பட்டாலும், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ளது போல், கோவையிலும் பொதுமக்கள் நெரிசலின்றியும், விரைவாகவும் பயணிக்க ஏதுவாக மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டம் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களால் விடுக்கப்பட்டு வந்தது.
கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய வெளி மாவட்டங்களை இணைக்கும் 6 பிரதான சாலைகள் உள்ளன. இவற்றில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து கோவையில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டம் தொடங்கப்படும் என தமிழக அரசு, நடப்பு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது. இதைத் தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான திட்ட அறிக்கை தயாரிப்புப் பணி சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரால் தொடங்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மெட்ரோ ரயில் அதிகாரிகள் உட்பட பல்துறை வல்லுநர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இருநாட்களுக்கு முன்னர் கோவையில் நடந்தது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் கூறும்போது, ‘‘கோவையில் நெரிசலற்ற சீரான போக்குவரத்துக்காக அவிநாசி சாலை, சத்தி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை ஆகிய நான்கு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க வலியுறுத்தப்பட்டிருந்தது.
நாங்கள் நடத்திய ஆய்வுகளின்படி முதல்கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய வழித்தடங்களில் மொத்தம் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல் வழித்தடமாக உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து டவுன்ஹால், அவிநாசி சாலை வழியாக நீலாம்பூர் வரை மொத்தம் 23 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 18 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இரண்டாம் கட்டமாக, கோவை ரயில் நிலையத்தில் இருந்து சத்தி சாலையில் உள்ள வளியம்பாளையம் வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த வழித்தடத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கோவை எல் அன்ட் டி புறவழிச் சாலையையொட்டி கோவை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால், அது வரை முதல் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை நீட்டித்து இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மெட்ரோ ரயில் திட்டத்துக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
வரும் 15-ம் தேதி இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும். பொதுமக்கள் எவ்வித நெரிசலிலும் சிக்காமல் செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மெட்ரோ ரயிலில் பயணிகள் செல்வதற்காக 3 பெட்டிகள் இருக்கும். ஒரு பெட்டியில் 250 பேர் வரை பயணிக்கலாம். 5 முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்,’’ என்றார்.
75 ஏக்கர் நிலம் தேவை: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் திட்டத்துக்கு வழித்தடம் அமைக்க 35 ஏக்கர் இடம், பணிமனை, ரயில் நிலையங்கள் அமைக்க 40 ஏக்கர் நிலம் என மொத்தம் 75 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் இடங்களில் அரசு நிலங்கள், புறம்போக்கு இடங்கள் மட்டுமின்றி, தனியாருக்கு சொந்தமான நிலங்களும் உள்ளன. இத்திட்டத்துக்காக 75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
அதில் அரசு, தனியார், புறம்போக்கு இடங்கள் எங்கெங்கு, எவ்வளவு உள்ளன, தனியாரிடம் இருந்து கையகப்படுத்தப்பட வேண்டிய நிலம் எவ்வளவு என்பது போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரிவான வரைவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், நிலம் கையகப் படுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்,’’ என்றனர்.
ரயில் நிலையம் அமையும் இடங்கள்: அவிநாசி சாலையில் அமையும் முதல் வழித்தடமான உக்கடம் - நீலாம்பூர் வழித்தடத்தில் உக்கடம் பேருந்து நிலையம், டவுன்ஹால், கோவை ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஜி.கே.என்.எம் மருத்துவமனை, லட்சுமி மில் சந்திப்பு, நவஇந்தியா சந்திப்பு, பீளமேடு புதூர் சந்திப்பு, ஃபன்மால் சந்திப்பு, ஹோப்காலேஜ் சந்திப்பு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி சந்திப்பு, விமான நிலையம் உள்ள சிட்ரா சந்திப்பு, எம்.ஜி.ஆர் நகர், பி.எல்.எஸ் நகர், வெங்கிடாபுரம், பார்க் பிளாசா, நீலாம்பூர், விமான நிலையம் ஆகிய 18 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைகின்றன.
சத்தி சாலையில் அமையும் இரண்டாவது வழித்தடத்தில் கோவை ரயில் நிலையம் சந்திப்பில் தொடங்கி ராம்நகர், காந்திபுரம் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், மோர் மார்க்கெட், கணபதி புதூர், அத்திப்பாளையம் சந்திப்பு, ராமகிருஷ்ணா மில்ஸ், விநாயகபுரம், சித்ரா நகர்,சரவணம்பட்டி, விசுவாசபுரம், வி.ஜி.பி நகர், வளியம்பாளையம் ஆகிய 14 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இரண்டு வழித்தடங்களிலும் சேர்த்து மொத்தம் 32 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. கோவை ரயில் நிலையத்தில் இரண்டு மெட்ரோ ரயில்களும் சந்திக்கும் வகையில் ஜங்ஷனும் அமைக்கப்பட உள்ளது.
மேல் வழித்தடம் மூலமே ரயில் போக்குவரத்து: மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உள்ள அவிநாசி சாலை 6 வழிச்சாலையாகும். இச்சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.1,600 கோடி மதிப்பில் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்டப் பாலம் நெடுஞ்சாலைத் துறையினரால் கட்டப்பட்டு வருகிறது.
தற்போது இத்திட்டப்பணி தீவிரமடைந்துள்ளது. சாலையின் நடுப்பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. எனவே, உக்கடம் - நீலாம்பூர் வழித்தடத்தில், அவிநாசி சாலையில் இடதுபுறப் பகுதியில் மெட்ரோ ரயில் செல்வதற்கான வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
தற்போது கட்டப்பட்டு வரும் உயர்மட்டப் பாலத்தை விட சற்று உயரமாக மெட்ரோ ரயில் செல்வதற்காக பாலம் கட்டப்படும். ஏறத்தாழ 13 மீட்டர் முதல் 20 மீட்டர் உயரம் வரை தூண்கள் அமைக்கப்பட உள்ளன. ரயில் நிலையங்களும் இதே அளவு உயரத்துக்கு ஏற்ப அமைக்கப்படும். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தரைக்கு அடியில் சுரங்கப்பாதை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், கோவையில் மேல் வழித்தடம் மூலம் மட்டுமே, அதாவது, சாலையில் தூண்கள் அமைக்கப்பட்டு, அதன் மீது மட்டுமே ரயில் இயக்கப்படும். அதேபோல், சாலையின் நடுப்பகுதியில் தூண்கள் அமைத்து சத்தி சாலையில் ரயில் போக்குவரத்துக்கான வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவி: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்படும். பின்னர், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தொகை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்று செயல்படுத்தப்படும்.
திட்டம் தொடங்கப்படும் காலத்தில் இருந்து அதிகபட்சம் மூன்றரை வருடங்களுக்குள் மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்படும். ஒரு இடத்தில் இருந்து மட்டும் பணிகளைத் தொடங்காமல், இருபுறத்திலும் திட்டப்பணிகள் தொடங்கப்படும்,’’ என்றனர்.
குறித்த காலத்தில் முடிப்பது அவசியம்: கோவை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் ஜமீல் அகமது கூறும்போது, ‘‘கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் வலியுறுத்தி வந்தோம். முக்கிய தொழில் நகரமான கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக மெட்ரோ ஸ்ரீதரனும் கோவையில் ஒருமுறை ஆய்வு நடத்தியுள்ளார். பல்வேறு துறைகளுடன் கலந்தாலோசிக்கும் மெட்ரோ ரயில் நிறுவனத்தினர், மெட்ரோ ஸ்ரீதரனிடமும் கலந்தாலோசிக்க வேண்டும். இதை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநரிடமும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
கோவையின் வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியம். திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு, நிதிகள் பெறுதல், நிறுவனம் தேர்வு செய்தல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் முடிந்து, திட்டப்பணி அடுத்த 8 முதல் 12 மாதங்களுக்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, மெட்ரோ ரயில் திட்டப்பணியை தாமதமின்றி விரைவில் தொடங்கி, போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடித்துவிடுவதும் அவசியமாகும். அடுத்தகட்டமாக இருகூர்- வாளையாறு - மதுக்கரை - வடவள்ளி - துடியலூர் - சரவணம் பட்டி - பீளமேடு - இருகூர் ஆகிய வழித்தடத்திலும் இயக்க பரிசீலிக்கலாம்,’’ என்றார்.
சேலத்துக்கும் தேவை மெட்ரோ ரயில் சேவை: கோவையைப் போல் சேலம் மாவட்டமும் தொழில்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாக உள்ளது. ஜவுளி உற்பத்தி, மாட்டுத் தீவனம் தயாரிப்பு, ஜவ்வரிசி உற்பத்தி தொழில்கள் இங்கு பிரதானமானவையாகும். இங்கு இரும்புத்தாது அதிக அளவில் கிடைக்கிறது. இந்தியாவில் மேக்னஸைட் தாது அதிகம் கிடைக்கின்ற இடங்களில் சேலமும் ஒன்றாகும்.
டால்மியா மேக்னஸைட், தமிழ்நாடு மேக்னஸைட் போன்ற ஆலைகளுக்கு இங்கே சுரங்கங்களும் உள்ளன. தொழில் நகரமான கோவையின் வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவது போல், சேலத்தின் வளர்ச்சிக்கும் மெட்ரோ ரயிலின் சேவை தற்போதைய சூழலில் தேவையானதாகும்.
கோவையின் வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் அவசியம்: கொங்கு குளோபல் ஃபோரம் அமைப்பின் இயக்குநர் நந்தகுமார் கூறும்போது, ‘‘20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கக்கூடிய கோவை மாநகருக்கு மெட்ரோ ரயில் அவசியம். அரசு நிர்வாகத்தினர் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவாக தொடங்கி முடிக்க வேண்டும். தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படுகிறது. மீதம் உள்ள அடுத்த இரண்டு வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தற்போது தொடங்கி மேற்கொள்ள வேண்டும்.
மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் கைகொடுக்கும். பணிக்கு செல்பவர்கள், பொதுமக்கள், தொழில்துறையினர் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைவாக செல்ல முடியும். கோவையின் தொழில் வளர்ச்சிக்கு இத்திட்டம் கைகொடுக்கும்,’’ என்றார். ரெசிடென்ட்ஸ் அவேர்னஸ் அசோசியேஷன் ஆப் கோயம்புத்தூர் (ராக்) அமைப்பின் தலைவர் ஆர்.ஆர்.பாலசுந்தரம் கூறும்போது, ‘‘மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் தற்போது தொடங்குவதே தாமதமானதாகும். இதை முன்னரே தொடங்கியிருக்க வேண்டும். அவிநாசி சாலையில் உயர்மட்டப் பாலம் கட்டும் பணியின் தொடக்கத்தின் போதே, இதற்கான பணியையும் இணைத்து மேற்கொண்டிருக்கலாம்.
கோவையில் பேருந்துகளை தவிர, மக்கள் பயன்படுத்தக்கூடிய பொதுப் போக்குவரத்து சாதனங்கள் அதிகம் இல்லை. எனவே, தற்போதைய சூழலில் மெட்ரோ ரயில் திட்டம் வருவது மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தை விரைவாக தொடங்க வேண்டும். கோவையில் உள்ள அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலை, சத்தி சாலை ஆகிய பிரதான சாலைகளை இணைக்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment