Published : 05 Jul 2023 04:02 PM
Last Updated : 05 Jul 2023 04:02 PM

திருப்பூர் மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

வைகோ | கோப்புப்படம்

சென்னை: "திருப்பூர் மாவட்டத்தில் மறு சுழற்சி நூற்பு ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பதுடன், ஐந்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழிவுப் பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் பணி, ஓபன் எண்ட் (OE) நூற்பாலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600 OE நூற்பாலைகள் செயல்படுகின்றன. இவற்றில் 300 நூற்பாலைகள் வண்ண நூல் தயாரிப்பிலும், 300 OE நூற்பாலைகள் கிரே நூல் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றன.மின் கட்டணம் மற்றும் கழிவுப்பஞ்சு விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல், 300 OE நூற்பாலைகள் இன்று முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளன.

"மின் கட்டணம் மற்றும் கழிவுப்பஞ்சு விலை உயர்வால் OE நூற்பாலைகளில் வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.கடந்த 6 மாதங்களாக 50 சதவீத நூற்பாலைகள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், மின்கட்டண உயர்வால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் இன்று முதல் உற்பத்தி நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்கட்டமாக 300 கிரே நூல் தயாரிக்கும் ஓபன் எண்ட் நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தத்தைத் தொடங்கி உள்ளன. சில தினங்களில் மீதமுள்ள 300 வண்ண நூல் உற்பத்தி செய்யும் OE நூற்பாலைகளும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளன" என்று மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று ஒரு கிலோ பஞ்சு விலை ரூ.154-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கழிவுப் பஞ்சு விலை ஒரு கிலோ ரூ.112-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஏற்புடையதல்ல.ஒரு கிலோ கழிவுப் பஞ்சு ரூ.75-க்கு கிடைத்தால் தான் OE நூற்பாலைகளுக்கு பயனளிக்கும். இன்றைய சூழலில் ஒரு கிலோ நூல் உற்பத்திக்கு ரூ.20 நஷ்டத்தை OE நூற்பாலை தொழில்துறையினர் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே கடந்த 6 மாதங்களாக 50 சதவீத OE நூற்பாலைகள் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், இயங்காத நூற்பாலைகளுக்கும் நிலை கட்டணமாக மின்வாரியத்துக்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் செலுத்த வேண்டியுள்ளது. உச்சபட்ச நேர மின்பயன்பாடு கணக்கீடுக்கு மீட்டர் இல்லாத நிலையில் அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நெருக்கடியை எதிர்கொள்ள முடியாததால் இன்று முதல் 300 OE நூற்பாலைகள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. மின்கட்டணத்தை தமிழக அரசும், கழிவுப்பஞ்சு விலையை நூற்பாலை நிர்வாகத்தினரும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே பிரச்சினைக்கு தீர்வாகும் என்றும் மறுசுழற்சி ஜவுளி நிறுவன கூட்டமைப்பினர் அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், மங்கலம்,காரணம்பேட்டை, உடுமலை, வெள்ளக்கோவில் உள்ளிட்டப் பகுதிகளில் மறு சுழற்சி நூற்பு ஆலைகள் மூடப்பட்டு இருப்பதால் 1500 டன் நூல் உற்பத்தி பாதிப்பதுடன், ஐந்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலையும் உருவாகி உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக மறுசுழற்சி ஜவுளி நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x