Published : 05 Jul 2023 09:30 AM
Last Updated : 05 Jul 2023 09:30 AM
மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், அகரம் கிராமத்தில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பேராசிரியரும் தொன்மம் வரலாற்று ஆய்வு அறக்கட்டளையின் தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான சி.சந்திரசேகர் மற்றும் இந்து மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் தொடர்ச்சியான கள ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு நடந்த ஆய்வு ஒன்றில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகிஷாசுர மர்த்தினி நடுகல்லை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் சந்திரசேகர் கூறியதாவது: தமிழகத்தில் அதிக அளவில் கிடைத்துள்ள பலகைகல் சிற்பங்களில் பெரிதும் காணப்படும் உருவம் துர்க்கை அம்மன் ஆகும். இது சங்க காலத்தில் இருந்து, பல்லவர் காலம் தொடங்கி, சோழர் காலம் முதல் விஜயநகரம் மன்னர்கள் காலம் வரை காணப்படுகின்றன. பெண் தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் கொற்றவை, மகிஷாசுர மர்த்தினி, துர்கை அம்மன், நிரம்பசுதனி என பல்வேறு பெயர்களில் காளி வழிபடப்படுகிறாள்.
இந்நிலையில் அகரம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள பலகை போன்ற பாறையில் காணப்படும் காளியானது, மகிஷாசுர மர்த்தினி வகையைச் சார்ந்ததாகும். கி.பி.13 அல்லது 14-ம் நூற்றாண்டு விஜயநகர் காலத்தை சேர்ந்ததாக கருதுகிறேன். சுமார் 8 அடி உயரமுள்ள இந்த நடுக்கல் எட்டு கரங்களுடன், மகிஷாசுரன் எனப்படும் எருமை தலை சூரனின் தலையின் மீது நின்றவாறு காளி காட்சியளிக்கிறாள்.
தலையில் கொண்டையுடன் நீண்ட சடை முடியோடும், மார்பு கட்சையோடு இக்காளி காணப்படுகிறாள். பொதுவாக, மகிஷாசுர மர்த்தினி சிறிய இடை அமைப்போடு நிமிர்ந்த மார்போடும் மார்பில் பாம்பு அல்லது துணியை கட்சையை கட்டியவாறும் அமைக்கப்பட்டிருப்பது இதனுடைய சிறப்பாகும்.
இதன், இடதுபுறம் உள்ள நான்கு கரங்களில் முதன்மை கரமானது இடுப்பில் கையை வைத்து ஊன்றியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கரத்தில் சங்கும், மூன்றாவது கரத்தில் வில் அம்பும், நான்காவது கரத்தில் கேடயம் உள்ளவாறு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
காளியின் வலதுபுறம் உள்ள கரங்களில், முதன்மை கரத்தில் எச்சரிக்கை செய்யும் விதமாகமணி வைத்துள்ளது போலவும், இரண்டாவது கையில் நாக சர்ப்பத்தை சாட்டையாகவும், மூன்றாவது கையில் மிகப்பெரிய வாள் ஒன்றையும், நான்காவது கரத்தில் மான் கொம்பை ஆயுதமாக தரித்தபடியும் அமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் ஒரே ஒரு நகைக் காட்டப்பட்டுள்ளது.
இடுப்பில் முழங்காலுக்கு மேல் ஆண்கள் அணியும் அரைக்கால் சட்டை போன்று அமைப்போடும், இடுப்பில் பாம்பினால் கட்டப்
பட்ட கயிற்றோடும் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். கால்களில் வீரத்தண்டைகள் காணப்படுகின்றன. எருமையின் இருகொம்புகள் இருபுறமும் வளைந்தும், அதன் காதுகள் அதற்கு கீழ்நோக்கியும் எருமை தலையின் மேல் இரு கால்களும் ஊன்றி நின்றுவாறு சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம் மகிஷாசுரமர்தினிதான் என்பதை உணர்த்தும் வகையில் இடதுபுறம் காக்கையும், வலதுபுறம் நீண்ட கொம்புகள் உடைய மானும் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் மகி ஷாசுர மர்த்தினி போர் புரியும்போது பூதகணங்களும், பிற பெண் தெய் வங்களும் அவருக்கு உதவுவது போன்று, அவரை வழிபட்டுக் கொண்டே இந்நிகழ்ச்சியில் ஈடுபடுவது போன்று, இதன் இருபுறமும் இரண்டு பெண் உருவங்கள் காணப்படுகின்றன.
பொதுவாக, பெண் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக இந்த பலகை கல் வழிபாடு காணப்படுகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லவர் கால தொடங்கி இன்று வரை ஏராளமான நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், மான் அலங்காரத்தோடு காணப்படுவது பலகை கல்லில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். மைசூர் என்பது மகிஷாசுரனை வதம் செய்த இடமாக கருதக்கூடியது.
கர்நாடகத்தில் இருக்கக்கூடிய ஹாலு மத்த புராணம் என்ற புராணத்தில், இக்காளி எவ்வாறு மகிஷாசுரனை வதம் செய்தாள் என்பதை பற்றி விவரம் காணப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதுகுறித்து, ஆசிரியர் ரமேஷ் கூறும்போது, செய்யூர் சுற்றுவட்டார பகுதியில் தொடர்ச்சியாக கள ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
ஏனெனில், இப்பகுதியுடைய உள்ளூர் வரலாறும், சமய வரலாறும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதால், ஏராளமான இடங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு கள ஆய்வினை தொடர்ந்து நடத்தும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
செய்யூர் பகுதிகளில் வரலாற்று ஆய்வாளர்கள் மூலம் கண்டறியப்படும் இத்தகைய சிற்பங்களை, வருவாய்த் துறை மூலம் பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் செய்யூர் அருகே இந்தளூர் கிராமத்தில் விஜயநகர் பேரரசு காலத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நவகண்டம் நடுகல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய நடுகல்கள் தொடர்ந்து இப்பகுதியில் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT