Published : 05 Jul 2023 07:07 AM
Last Updated : 05 Jul 2023 07:07 AM
சென்னை: வனவிலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில், மின் வேலிகளை பதிவு செய்வது கட்டாயம் என்பது உள்ளிட்ட ஒழுங்குமுறை விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு: வனவிலங்குகளை பாதுகாப்பதில் தமிழக அரசு அதீத ஈடுபாடு காட்டி வருகிறது. இந்நிலையில், உயர் மின்னழுத்த மின் வேலிகளால் மின் விபத்து ஏற்பட்டு, குறிப்பாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி இறக்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன.
எனவே வனவிலங்குகளை பாதுகாக்க மின் வேலிகளை அமைப்பதற்கான தரப்படுத்தப்பட்ட அளவுகோலுடன் கூடிய விதிமுறைகளை நிர்ணயிப்பது இன்றியமையாததாகிவிட்டது. அதே நேரம், காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில், வனவிலங்குகளால் சேதமடையும் விவசாய விளைபொருட்களைப் பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளின் நலனைப் பேணுதலும் முற்றிலும் அவசியமாகிறது.
விவசாயிகள் தங்கள் பயிரை பாதுகாப்பதற்கு தரப்படுத்தப்பட்ட இந்த விதிமுறைகள் உதவும். இதன் முதல் முயற்சியாக, தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மின்வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகளை அறிவித்து அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இது சூரியசக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின்வேலிகள் அமைப்பதையும், விவசாய நிலங்களைச் சுற்றி ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளைப் பதிவு செய்வதையும், தரப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் வழிவகுக்கும். சூரியசக்தி மின் வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைக்க முன் அனுமதி பெறுவது கட்டாயமாகிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின்வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் தமிழக அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காடுகளில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவன மின் வேலிகளும், இவ்விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள BIS தரநிலைகளான BIS-302-2-76 (இந்தியா) விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அறிவிக்கை செய்யப்பட்ட காப்புக்காட்டின் வனப்பகுதியில் இருந்து 5 கிமீ தொலைவுக்குள் ஏற்கெனவே மின்வேலிகளை
அமைத்துள்ளவர்கள், தங்கள் வேலிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட வன அலுவலரிடம் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகள் வெளியிடப்பட்ட தேதியில் ஏற்கெனவே மின் வேலிகள் அமைத்துள்ள நில உரிமையாளர், இந்த விதிகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் பதிவுச்சான்றிதழை பெறுவதற்கு மாவட்ட வன அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கிடைத்ததும் சொத்தின் உரிமையாளர் 90 நாட்களுக்குள் மின் வேலி அமைத்து, உறுதி மொழியுடன் மின் வேலியை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும். வனத்துறை மற்றும் மின்துறை அதிகாரிகள் கூட்டுக்குழுவின் ஆய்வுக்குப்பிறகு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்வேலியின் தரம் மதிப்பாய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT