Published : 05 Jul 2023 07:40 AM
Last Updated : 05 Jul 2023 07:40 AM

மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதி

தமிழக காங்கிரஸ் நெசவாளர் அணியின் மாநில செயற்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று பேசினார். நெசவாளர் அணி தலைவர் சுந்தரவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு

சென்னை: மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கர்நாடகத்தில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதாக அந்த மாநிலத்தின் நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து கொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேவையற்ற வாதங்களை முன்வைக்கிறார். அவர், “கர்நாடகத்தில் நடைபெறும் எதிர்க்கட்சிகளுடைய கூட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றால், அவர் திரும்ப தமிழகத்துக்குள் வர முடியாது. ‘கோ பேக் ஸ்டாலின்’ என்ற கோஷத்தை முன்வைப்போம்” என்கிறார்.

கர்நாடக அமைச்சர் சொன்னதற்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தனது கடுமையான மறுப்பை தெரிவித்திருக்கிறார். ஆனால், அண்ணாமலையோ சிவக்குமார் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரே ஒழிய, தமிழக நீர்வளத் துறை அமைச்சரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. காரணம் அரசியல். கடந்த தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் அண்ணாமலை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்று சொல்ல இவர் யார்?

கர்நாடகத்தில் பொம்மை அரசு இருந்தபோது, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திடம் சென்று மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்;டத்தில் ஒப்புதல் பெற்றது பாஜக. சட்டப்படி, மரபுப்படி காவிரி நீரை பயன்படுத்துகிற மாநிலங்களின் அனுமதியைப் பெற்று தான், மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் மேகேதாட்டு அணை வரைவுத் திட்டத்தை அங்கீகரித்திருக்க வேண்டும். ஆனால், பாஜகவினரோ டெல்லியிலும், கர்நாடகத்திலும் சேர்ந்து தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் அனுமதியை கேட்காமல் அங்கீகாரம் அளித்தார்கள்.

இதுதான் மிகப்பெரிய துரோகம். மேகேதாட்டு அணை கட்டுவதற்கான முதல் முயற்சியும் இதுதான். அன்றைக்கு இருந்த அதிமுக அரசு வாய்மூடி மவுனமாக இருந்தது. ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தோம். காவிரி நீரைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அதனை யாரும் மீறிவிட முடியாது.

கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே அந்த அணையை கட்டிவிட முடியாது. தமிழக அரசும், தமிழக காங்கிரஸும் மற்றும் எங்களுடைய கூட்டணி கட்சிகளும், சட்டமும், நீதியும் அதை ஒருபோதும் அனுமதிக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x