Published : 05 Jul 2023 07:28 AM
Last Updated : 05 Jul 2023 07:28 AM
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராமேசுவரத்தில் வரும் 28-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார்.
2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், பூத் கமிட்டிகளை வலுப்படுத்தல், கூட்டணி, மாநில அரசியல் சூழல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து விவசாயம் சார்ந்த தகவல்களைக் கொண்ட ‘நவீன விவசாயி’ என்ற மாத இதழை அண்ணாமலை வெளியிட்டார். பின்னர், மாநிலத் துணைத் தலைவர்கரு.நாகராஜன், செய்தியாளர் களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் வரும் 23-ம்தேதி பாஜக சார்பில் 5 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் அண்ணாமலை ஓரிரு நாட்களில் அறிவிப்பார்.
தமிழகம் முழுவதும் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண்,என் மக்கள்’ யாத்திரையை வரும்28-ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராமேசுவரத்தில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு நாளும் கிராமப் பகுதிகளில் 2 சட்டப்பேரவைத் தொகுதிகளையும், நகர்ப்புறங்களில் 4 தொகுதிகளையும் கடக்கும் வகையில் யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த யாத்திரைக்கு மாநிலப் பொறுப்பாளராக, தமிழக பாஜகதுணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், துணைப் பொறுப்பாளராக விளையாட்டுப் பிரிவுத் தலைவர்அமர்பிரசாத் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 18 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 200 நாட்களுக்கு யாத்திரையைநடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அண்ணாமலையுடன் பயணிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில், பாஜக அகிலஇந்தியப் பொதுச் செயலாளர் சி.டி.ரவி, மாநில துணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, துணைத் தலைவர் கரு.நாகராஜன், பாஜகமூத்த தலைவர் ஹெச்.ராஜா,தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், எம்எல்ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாஜகவில் கண்ணதாசன் மகன்: முன்னதாக கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாதுரை கண்ணதாசன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT