Published : 05 Jul 2023 07:21 AM
Last Updated : 05 Jul 2023 07:21 AM

காவிரி நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு கடிதம்: மத்திய அமைச்சரை சந்திக்க துரைமுருகன் டெல்லி பயணம்

அமைச்சர் துரைமுருகன் | கோப்புப் படம்

சென்னை: ஜூலை மாதம் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், மேகேதாட்டு விவகாரம், தண்ணீர் திறப்பு குறித்து மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை சந்திக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

தமிழகம் - கர்நாடகா இடையேகாவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, காவிரியில் தமிழகத்துக்கு மாதம்தோறும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் தண்ணீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். அதன்படி ஜூலை மாதத்துக்கு 34 டிஎம்சி நீரை காவிரியில் திறக்க வேண்டும்.

துணை முதல்வர் சர்ச்சை கருத்து: ஆனால், கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தமிழக நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, மத்திய நீர்வளத் துறை மற்றும்காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜூலை மாதம் தரவேண்டிய 34 டிஎம்சி மற்றும் ஜூன் மாதத்துக்கு வழங்க வேண்டிய பற்றாக்குறை நீரை திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஜூலை மாதத்துக்கான தண்ணீரை குறைக்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண் டும்.

மேட்டூர் அணை நீர்மட்டம்: மேட்டூர் அணையில் இருக்கும்தண்ணீர் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால், மக்கள் பயன்பாட்டுக்கான தண்ணீரை திறந்துவிட உத்தரவிடவேண்டும் என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மேகேதாட்டு விவகாரம், தண்ணீர் திறப்பு குறித்துமத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லி சென்றார்.

சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடகா அரசு தண்ணீர் திறக்கவில்லை. எனவே காவிரி மேலாண்மை ஆணையம் மூலம்அவர்களுக்கு வலியுறுத்த உள்ளேன். மாதம்தோறும் வழங்கவேண்டிய தண்ணீரை அவர்கள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

காரணத்தை விளக்குவோம்: தமிழகத்துக்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீருக்குப் பதில்2.833 டி.எம்.சி தண்ணீர் மட்டுமேவழங்கியதால், 6.357 டி.எம்.சி நீர்நமக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். ஆனால் ஏன் அணை கட்டக் கூடாது என்பதை காரணத்தோடு விளக்கம் கொடுப்போம்.

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை சென்றுள்ளது கூட தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமி பேசு கிறார். இவ்வாறு அமைச்சர் துரை முருகன் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீருக்குப் பதில் 2.833 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கியதால் 6.357 டி.எம்.சி நீர் நமக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேகேதாட்டுவில் அணை கட்டுவது குறித்து தமிழக அரசுடன் கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x