Published : 05 Jul 2023 07:00 AM
Last Updated : 05 Jul 2023 07:00 AM

புதுவையிலிருந்து யாழ்ப்பாணம், திரிகோணமலைக்கு கப்பல்: ரங்கசாமியிடம் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் கடிதம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்த இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்.

புதுச்சேரி: யாழ்ப்பாணம் - காரைக்கால் இடையிலான கப்பல் சேவைக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதன் வழித்தடத்தை மாற்றி புதுச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம், திரிகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா, வணிகத் தொடர்பு மேம்படும் என்று புதுச்சேரி முதல்வரிடம் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கடிதம் அளித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேற்று முதல்வர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இச்சந்திப்பின்போது, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் சந்திர பிரியங்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது செந்தில் தொண்டமான் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு குறிப்பாக இலங்கை பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் புதுச்சேரியில் இருந்து மருந்துகளை அனுப்பியது பெரும் உதவியாக இருந்தது. காரைக்காலில் இருந்து யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வரையிலான கப்பல் சேவை முயற்சிகளுக்கு நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தை மாற்றி புதுச்சேரி - காங்கேசன் துறை மற்றும் திரிகோணமலைக்கு கப்பல் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்தால் சுற்றுலா மற்றும் வணிகத் தொடர்பு மேம்படும்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கோணேஸ்வரம் கோயில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் மற்றும் நயனார் தீவு, கதிர்காமம் முருகன் கோயில், நுவரேலியா சீதை கோயில், ரம்பபோடா ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு தரிசனங்களை மேற்கொள்ள இலங்கைக்கு முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக வரவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகம் இலங்கையின் பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாகும். இது இந்தியாவுக்கு மிக அருகில் உள்ள துறைமுகம் ஆகும். உள்நாட்டுப் போரில் சேதமடைந்த இந்த துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா 2018-ல் ரூ.287 கோடி நிதியுதவி அளித்தது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்தியர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால், காங்கேசன்துறை துறைமுகத்தில் காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்க இலங்கை அரசு விருப்பம் தெரிவித்தது.

முதல்வர் பரிசீலனை: இத்திட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடந்தன. ஆனால் சில நடைமுறை சிக்கலால் இத்திட்டம் தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது காரைக்காலுக்குப் பதிலாக புதுச்சேரியில் இருந்து இச்சேவையை தொடங்க முயற்சி எடுக்க இலங்கை தரப்பில் இருந்து கோரியுள்ளனர். அதை புதுச்சேரி முதல்வர் பரிசீலிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x