Published : 05 Jul 2023 09:21 AM
Last Updated : 05 Jul 2023 09:21 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி – திண்டுக்கல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிலம் கையகப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருப்பூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், திருச்சி, சென்னைக்கும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
தென்னை நார் பொருட்கள், ஜவுளி, தேயிலை, தேங்காய் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி செல்லும் கன்டெய்னர் லாரிகள் மற்றும் சரக்கு லாரிகளால் வழியில் உள்ள முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, 2019-ம் ஆண்டு பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலமாக, இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் தொடங்கி, திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரத்தை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக, திண்டுக்கல் - பொள்ளாச்சி இடையே மொத்தம் 131.9 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக கமலாபுரம் - ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம், மடத்துக்குளம் - பொள்ளாச்சி என மூன்று பிரிவுகளாக ரூ.3,649 கோடி செலவில் நடைபெறுகிறது.
இதில் பிரதான சாலை மட்டுமின்றி, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, மடத்துக்குளம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு புறவழிச் சாலையாக அமைவதால், கிராமப்புறங்கள் வழியாக இப்பணி தீவிரமாக நடைபெறுகிறது. பொள்ளாச்சி - தாராபுரம் நெடுஞ்சாலை பெரியாக்கவுண்டனூர் பகுதியில் நான்கு வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சினை இருந்ததால், சுமார் 6 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர். இதையடுத்து, பொள்ளாச்சி ஏ.எஸ்.பி பிருந்தா தலைமையிலான போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டியும்,வீடுகளை இடித்தும் அப்புறப்படுத்தினர்.
3 பிரிவுகளாக பிரித்து நடைபெறும் பணியில் கமலாபுரம் - ஒட்டன்சத்திரம் இடையே 40 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பணிகள் முழுமையடையும் என்றும், ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம் இடையே 90 சதவீதம் பணிகள் முடிக்கப் பட்டுள்ளதால், மீதமுள்ள பணிகள் அடுத்த மாதம் முடிக்கப்படும் என்றும், மடத்துக்குளம் - பொள்ளாச்சி இடையே 72 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT