Published : 20 Jul 2014 04:12 PM
Last Updated : 20 Jul 2014 04:12 PM
தமிழக பாஜகவின் புதிய தலைவராக எச்.ராஜா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், கன்னியாக்குமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். ‘ஒருவர் 2 பொறுப்புகளை வகிக்க கூடாது’ என்ற பாஜக விதியின்படி மத்திய இணை அமைச்சராகவுள்ள பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் பதவியில் நீடிக்க முடியாத நிலை உள்ளது.
இதையடுத்து, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிப்பது குறித்து பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில், தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் மத்திய இணை அமைப்பு பொது செயலாளர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 42 மாவட்ட தலைவர்களும் பங்கேற்று புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்வது குறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு உள்ளிட்டோரின் பெயர்களை, கட்சி நிர்வாகிகள் முன்மொழிந்தனர். அவர்களுடைய பெயர்கள் டெல்லி தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பாஜக துணைத் தலைவராகவுள்ள எச்.ராஜாவை புதிய தலைவராக நியமிக்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT