Published : 05 Jul 2023 06:49 AM
Last Updated : 05 Jul 2023 06:49 AM

31,008 பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: ரூ.404 கோடி நிதி ஒதுக்கி அரசாணை

சென்னை: தமிழகத்தில் 31,008 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை விரிவாக்கம் செய்து, அதற்கு ரூ.404 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமூகநலத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி 13-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால் ஏற்பட்டுள்ள பயனைக் கருத்தில்கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்’’ என்று அறிவித்தார்

இதையடுத்து, 2023-24-ம் நிதியாண்டு பட்ஜெட்டில், ‘‘காலை உணவுத் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள 30,122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.500 கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சிகள் மற்றும் மலைப் பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,14,095 தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி ஒதுக்கி, கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

அடுத்தகட்டமாக, 433 மாநகராட்சி, நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 56,160 மாணவ, மாணவிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற பகுதிகள், ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18.54 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த, ரூ.539.88 கோடி நிதி ஒதுக்குமாறு சமூகநலத் துறை இயக்குநர், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.

இதை கவனமாகப் பரிசீலித்த தமிழக அரசு, காலை உணவுத் திட்டத்தை 2023-24-ம் நிதியாண்டுக்கு விரிவுபடுத்துவதற்கான உத்தரவுகளை வெளியிடுகிறது. இதன்படி, 31,008 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 15,75,900 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதற்காக, 2023-24 நிதியாண்டில் ரூ.404.41 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள படி, ஏதேனும் ஒரு சிற்றுண்டியை பள்ளியின் அனைத்து வேலை நாட்களிலும் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். அனைத்து குழந்தைகளுக்கும் காலை 8 மணி முதல் 8.50 மணிக்குள் சிற்றுண்டி வழங்க வேண்டும். கலப்படமின்றி உணவு சமைக்கப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. உணவு வழங்கும் முன், பள்ளி மேலாண்மைக் குழுவினர் அதை உண்டு பார்த்து, பின்னர் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அரசாணை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் தொடங்கிவைப்பார்: ஏற்கெனவே 2 கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகத் தொடங்கிவைத்தார். அதேபோல, விரிவாக்கத் திட்டத்தையும் வரும் ஜூலை 2-வது வாரத்தில் முதல்வர் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x