Last Updated : 04 Jul, 2023 08:36 PM

1  

Published : 04 Jul 2023 08:36 PM
Last Updated : 04 Jul 2023 08:36 PM

கோவை தனியார் கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் | படங்கள்: ஜெ.மனோகர்

கோவை: கோவை சுகுணாபுரம் அருகே, தனியார் கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை பாலக்காடு சாலையில் குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் பிரிவு அருகே தனியார் கல்வி நிறுவன வளாகம் உள்ளது. இங்கு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கலைக் கல்லூரி ஆகியவை உள்ளன. இதன் மற்றொரு நுழைவுவாயில் பகுதி, சுகுணாபுரம் மலைப்பாதை பகுதியில் உள்ளது. இங்கு பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்வி நிறுவன வளாகத்தின் ஒரு பகுதியில் மாணவர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. சுகுணாபுரம் மலைப்பாதையில் உள்ள கல்லூரியின் நுழைவுவாயிலை கடந்து சிறிது தூரம் தள்ளியுள்ள மேற்கண்ட விடுதிக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தப் பணியில் மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கருங்கற்களைக் கொண்டு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு வந்தது. இன்று (ஜூலை 4-ம் தேதி) மாலை இந்த சுற்றுச்சுவர் கட்டும் பணியில் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

தரைப்பகுதியில் குழியை தோண்டி, அதன் மீது கான்கிரீட் போட்டு, கருங்கற்களைக் கொண்டு தொழிலாளர்கள் சுற்றுச்சுவரை கட்டி வந்தனர். அப்போது சுற்றுச்சுவர் அமைப்பதற்காக கட்டப்பட்ட சுற்றுச்சுவர் அருகே குழி தோண்டியதாக தெரிகிறது. அப்போது லேசான மழையும் பெய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அழுத்தம் தாங்காமல் மேற்கண்ட சுற்றுச்சுவர் திடீரென இடிந்து கீழே சரிந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.

சுமார் 50 மீட்டர் நீளத்துக்கு 10 அடி உயர சுற்றுச்சுவர் சரிந்து அதன் கற்கள் விழுந்த வேகத்தில் 5 தொழிலாளர்கள் அதற்கு அடியில் சிக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவை தெற்கு தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கற்களுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்துக்கு பிறகு கற்களுக்கு அடியில் சிக்கியவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீஸார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகநாதன்(53), நாகெல்லா சத்யம்(48), ரபாகா கண்ணையன் (49), மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்கோஷ் ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும், காயமடைந்தவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பருன்கோஷ் என்பதும் தெரிந்தது.

சுற்றுச்சுவர் விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பருன்கோஷ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல், சுமார் 10 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்ட போது, மேற்கண்ட சம்பவம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x