Published : 04 Jul 2023 07:46 PM
Last Updated : 04 Jul 2023 07:46 PM
சேலம்: சேலம் - தலைவாசல் கால்நடைப் பூங்காவில் தோல் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தலைவாசல் கால்நடை ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் தோல் தொழிற்சாலை அமைக்கக் கூடாது எனவும், பூங்காவுக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தவும் வலியுறுத்தி சிப்காட் மேலாண் இயக்குநர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் ஆகியோரிடம் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
சேலம் மாவட்ட எல்லையான தலைவாசலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா வளாகத்தில், சிப்காட் சார்பில் தோல் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில், சிப்காட் மேலாண் இயக்குநர் சுந்தரவல்லி, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குநர் லட்சுமி ஆகியோர் இன்று ஆய்வுக்கு வந்திருந்தனர். அவர்களை, ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சங்கரய்யா, செயலாளர் கோவிந்தன், மாவட்டத் தலைவர் சரவணன் உள்பட விவசாயிகள் 10-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, மனு அளித்தனர்.
மனு குறித்து ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் சங்கரய்யா கூறியது: ''தலைவாசலில் அமைக்கப்பட்டுள்ள கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளது. இந்நிலையில், கால்நடைப் பூங்காவின் சேலம் மாவட்ட எல்லைப் பகுதிக்குப் பதிலாக, அதனுடன் இணைந்த கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியில், தைவான் நாட்டு நிறுவனத்தால் தோல் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கால்நடைப் பூங்காவுக்கு அருகிலேயே தோல் தொழிற்சாலை அமைக்கப்படும்போது, கால்நடைப் பூங்கா சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர், காற்று ஆகியவை மாசடைந்துவிடும். தலைவாசல் சுற்று வட்டாரப் பகுதிகள், விவசாய முக்கியவத்துவம் வாய்ந்தவை. நிலத்தடி நீர் மாசடைந்தால், இப்பகுதிகளில் விவசாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடும். எனவே, கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவின் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப் பகுதியில், தோல் தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
கால்நடைப் பூங்காவில் இருந்து 30 கிமீ., தொலைவில் நெசலூர் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு புதியதாக எந்த தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. எனவே, தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவில் அமைக்க திட்டமிட்டுள்ள தோல் தொழிற்சாலையை, நெசலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்க திட்டமிட வேண்டும். கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நன்னீர் வளர்ப்புத் திட்டம், ஆவின் வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT