Last Updated : 04 Jul, 2023 06:59 PM

 

Published : 04 Jul 2023 06:59 PM
Last Updated : 04 Jul 2023 06:59 PM

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

மதுரை: கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடியைச் சேர்ந்த ஸ்டெர்லின், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: 'கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் கன்னியாகுமரி கடற்கரை காந்தி மண்டபம் முதல் கோவளம் கிராம நிர்வாக அலுவலகம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் பாதசாரிகள் நடந்து செல்ல சிமெண்ட் மற்றும் கற்களால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையை ஆக்கிரமித்து பலர் கடை வைத்துள்ளனர்.

நடைபாதை ஆக்கிரமிப்பால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். சுற்றுலா பயணிகளால் கடற்கரையின் இயற்கை அழகை ரசிக்க முடியவில்லை. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் கோவளம் கிராம நிர்வாக அலுவலகம் வரை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ''புதிய வணிக வளாகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்து புதிய கட்டிடம் கட்டும் வரை, தற்காலிகமாக 168 கடைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ''மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்ட 168 கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும், அனுமதி வழங்கப்படாத கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். கன்னியாகுமாரி கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தடை செய்து, கன்னியாகுமரி கடற்கரை பகுதியை தூய்மையாக வைத்திருப்பதை பேரூராட்சி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x