Published : 04 Jul 2023 04:00 PM
Last Updated : 04 Jul 2023 04:00 PM
புதுச்சேரி: “புதுச்சேரியில் மறைமுகமாக சூதாட்ட கிளப்களைக் கொண்டுவர அரசு முயற்சி செய்து வருகிறது” என்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்,பி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரி பிராந்தியமான ஆந்திரம் அருகேயுள்ள ஏனாமில் கடந்த 6 மாதங்களாக மக்களின் பெரும் போராட்டத்துக்குப் பிறகு மூடப்பட்டிருந்த சூதாட்ட கிளப் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏனாமின் மையப் பகுதியில் தனியார் அமைப்பு மூலம் சூதாட்ட கிளப் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பாஜக மற்றும் என்ஆர் காங்கிரசார் இதற்கு துணை போய் உள்ளனர்.
சூதாட்ட கிளப் மூலம் ரூ.1 கோடி அளவில் நாள் ஒன்றுக்கு வசூலாகிறது. இதற்கு அரசாங்கம் துணை போகிறது. இதற்கு பாஜக செயல்பாடுதான் காரணம். இதற்கு ஏனாம் நிர்வாகி ஒப்புதல் தந்துள்ளார். துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு தெரியாமல் இது நடக்க வாய்ப்பில்லை.
புதுச்சேரியைச் சேர்ந்தோர் இந்த கிளப்பை நடத்தவில்லை. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு துணைநிலை ஆளுநர் சலுகை தந்துக்கொண்டிருக்கிறார். இதனால் ஏனாம் மக்கள் பேரழிவை சந்தித்து வருகின்றனர். இதனை தட்டிக் கேட்க முடியாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். புதுச்சேரி உட்பட இதர பிராந்தியங்களில் சூதாட்ட கிளப்களை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மதுபானக் கடைகளை திறந்தது போதாது என சூதாட்ட கிளப் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசிடம் நிதி இல்லை என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, சூதாட்ட கிளப்பை கொண்டு வந்து வருமானத்தை ஈட்டலாம் என கூறும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகத் தெரிகிறது. அரசு மறைமுகமாக சூதாட்ட கிளப்பை புதுவையில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. எம்மாநிலத்திலும் இல்லாத பேரழிவில் இருந்து மக்களைக் காக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு நான் கடிதம் எழுதவுள்ளேன்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி உள்ளனர். அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. புதுச்சேரியில் ஏன் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதுவை அரசாங்கம் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. அரசின் வரவு செலவு திட்டத்தில கல்வித் துறைக்கு அதிக நிதி செலவிட்டும், பயன்பெறும் மாணவர்கள் குறைவாக உள்ளனர். தேர்வு விகிதமும் குறைந்துள்ளது.
இதனை மாற்றி அமைக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும். புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 50 சதவிகித இடங்களை அளிக்கக் கோரும் மத்திய அரசின் இடஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமல்படுத்த வேண்டும். தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக அரசு செயல்பட்டு வருகிறது.
புதுவை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை துணை வேந்தரே கொடுக்கலாம். ஆனால், அதற்கான நடவடிக்கையில் அவர் எடுக்கவில்லை. புதுச்சேரியில் எம்.பி தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக உள்ளது. கட்சி மேலிடம் கூறினால் நான் போட்டியிடுவேன்" என்று அவர் குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT