Published : 04 Jul 2023 11:40 AM
Last Updated : 04 Jul 2023 11:40 AM

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

சென்னை: தனது கணவர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி அவரது மனைவி எஸ்.மேகலா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுமீது நீதிபதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி யார் என்பதை தேர்வு செய்ய தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14 அன்று கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர்நீதிமன்ற உத்தரவுபடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட உடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி அவரது மனைவி எஸ்.மேகலா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் இன்று (ஜூலை 4) தீர்ப்பு வழங்கினர். இரண்டு நீதிபதிகளும் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். முதலில் நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பினை வாசித்தார். அப்போது அவர், "இந்த மனு விசாரணைக்கு உகந்ததுதான். மனு ஏற்கப்படுகிறது. செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதம். அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.

நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது தீர்ப்பில், சிகிச்சை முடிந்து குணம் அடைந்தபின் செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க வேண்டும் என்று கூறி, மனுவினைத் தள்ளுபடி செய்தார். இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால், வழக்கு வேறு ஒரு அமர்வுக்கு மாற்றப்பட இருக்கிறது. மூன்றாவது நீதிபதி யார் என்பதைத் தீர்மானிக்க வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x