Published : 04 Apr 2014 12:19 PM
Last Updated : 04 Apr 2014 12:19 PM
திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட 3 பேர் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தனர்.
தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யுவராஜ் வியாழக்கிழமை முற்பகல் 11.15 மணிக்கு தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன் கும்மிடிப்பூண்டி தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர் சேகர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிராஜ், பாஜகவின் தொகுதி பொறுப்பாளர் ஜானகி ராமன் ஆகியோர் உடன் வந்தனர். யுவராஜ், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வடசென்னை தொகுதியில் போட்டியிட்டார்.
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள வழக்கறிஞர் சத்தியமூர்த்தி தனது வேட்பு மனுவை மதியம் 1.50க்கு தாக்கல் செய்தார். அவருடன் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நிர்வாகிகள் அம்பேத் ஆனந்த், மலர்வண்ணன் ஆகியோர் உடன் வந்தனர்.
சத்தியமூர்த்தி 2006-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டார். தற்போது, கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார்.
ஊழலுக்கு எதிரான இயக்கம் சார்பில், சந்திரசேகர், சுயேச்சை யாக மனு தாக்கல் செய்தார். எம்பிஏ பட்டதாரியான இவர், ரயில்வேயில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் ஊழலுக்கு எதிரான இயக்கத் தின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT