Published : 04 Jul 2023 06:05 AM
Last Updated : 04 Jul 2023 06:05 AM
சென்னை: அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடி, பாம்புகடி, தொற்றா நோய்களுக்கான மருந்துகள் இருப்பைக் கண்காணிக்கும் மேலாண்மை அமைப்பை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகத்தில், மாநில குளிர்பதன மருந்துக் கிடங்கு கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார்.
தொடர்ந்து, மருந்துகள் விநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பையும், மின் அலுவலக சேவைகளையும் தொடங்கிவைத்தார்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய தடுப்பூசித் திட்டத்தின் மூலம் 10 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் 9.16 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
மத்திய அரசால் தமிழகத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசி மருந்துகள் அனைத்தும் மாநில தடுப்பூசி மருந்துக் கிடங்கில் பெறப்பட்டு, 10 மண்டல மருந்துக் கிடங்குகளுக்கு குளிர்பதன முறையில் அனுப்பிவைக்கப்படுகின்றன. அங்கிருந்து46 மாவட்ட மருந்துக் கிடங்குகளுக்கு அனுப்பப்படுகின்றன.
மருந்து இருப்புக்காக ரூ.1.20கோடியில் கூடுதலாக 2 குளிர்பதன அறைகள் மற்றும் 2 உறைநிலை வைப்பு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கூடுதலாக 1 கோடி தடுப்பு மருந்துகளை சேமிக்கலாம். மேலும், பல்வேறு அரசு மருத்துவமனைகளில் தடுப்பு மருந்துகளுக்காக குளிர்பதனக் கிடங்கு கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, மாநில மருந்து விநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்புபயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலம் மருந்துகள் கொள்முதல் செய்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கட்டமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. முன்பு பாம்புக்கடி மற்றும் நாய் கடிக்கான மருந்துகள், வட்டார, மாவட்ட மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே கிடைத்தன.
தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தற்போது தொடங்கப்பட்ட மருந்துவிநியோக மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பின் மூலம், மாநில அளவில் மருந்துகளின் இருப்பைக் கண்காணிக்க முடியும்.
குறிப்பாக, நாய்க்கடி மற்றும்பாம்பு கடி மருந்துகள், தொற்றாநோய்களுக்கான மருந்துகள், அம்லோடிப்பின், அடினலால், மெட்பார்மின் போன்ற மாத்திரைகளின் இருப்பு கண்காணிக்கப்பட்டு, தேவையான அளவுக்கு விநியோகிக்கப்படும். இதற்கான மென்பொருள் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் மூலம் தயாரிக்கப்பட்டு, அதைக் கையாள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மாநிலம் முழுவதும் மின் அலுவலக சேவை (இ-சேவை) தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT