Published : 04 Jul 2023 07:09 AM
Last Updated : 04 Jul 2023 07:09 AM

மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் பேச்சு - ஓபிஎஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: மேகேதாட்டு அணை கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் பேசியிருப்பதற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கர்நாடகத்தில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் கட்சி மேகேதாட்டு ஆணையை கட்டுவோம் என கூறி வருகிறது. இது குறித்துஅண்மையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், மேகேதாட்டு திட்டத்தால் தமிழ்நாட்டுக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இதை புரிய வைக்கமுயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளார். மேகேதாட்டு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மேகேதாட்டு அணை குறித்து தமிழ்நாட்டுக்கு எதிராக தொடர்ந்து கர்நாடக துணை முதல்வர் பேசிவருவது கண்டனத்துக்குரியது.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மேகேதாட்டு அணை மற்றும் காவிரி நீர் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றில் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் உறுதியான பேச்சும், செயல்பாடும் தமிழக விவசாயிகளை குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந் திருக்கிறது. மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வரின் பேச்சை தமாகா சார்பில் கண்டிக்கிறேன். மேகேதாட்டு அணை, காவிரி நீர் ஆகியவற்றில் தமிழக மக்கள் தான் முக்கியம் என்பதை திமுக அரசு உறுதி செய்து கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய உரிமையை தராததோடு, மழை வெள்ள காலத்தில் மட்டும் எஞ்சிய நீரை திறந்துவிடும் கர்நாடக அரசு, தமிழ்நாட்டின் விவசாயம், குடிநீர் தேவைக்கு போதிய நீரை தராமல் அணை கட்ட நினைப்பது தமிழ்நாடு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x