Published : 04 Jul 2023 07:28 AM
Last Updated : 04 Jul 2023 07:28 AM
சென்னை: போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் 2011 - 2015 ஆண்டுகளில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் அப்போது, தான்அமைச்சராக இருந்த போக்குவரத்து துறையில் 81 பேருக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.1.62 கோடி பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 2018-ல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த வழக்கில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14-ம் தேதி கைது செய்தது.
முன்னதாக இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விட்டதால் வழக்கை முடித்து வைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை ஏற்று செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இது ஒருபுறம் இருக்க இந்தவழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது.வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஆரம்ப கட்டத்தில் இருந்து இவ்வழக்கை முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும் அமலாக்கத்துறையும் தங்களது தரப்பு விசாரணையை நடத்த அனுமதியளித்து மே மாதம்16-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் லஞ்ச ஒழிப்பு (ஊழல் தடுப்பு) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்துள்ளோம்.
அவர் உட்பட 178 பேருக்கு, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கசம்மன் அனுப்பப்பட்டது. இதில், 58 பேர் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திஉள்ளோம். இன்னும் 120 பேரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். உடல்நலம் தேறியவுடன் அவரிடமும் விசாரணை நடத்தப்படும்’என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT