Published : 04 Jul 2023 07:38 AM
Last Updated : 04 Jul 2023 07:38 AM
திருப்பத்தூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல் மற்றும் அவரது உதவியாளர் மீது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் மரிமாணிகுப்பம் அடுத்த ஓமக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவன். இவரது தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘அதிமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபீலை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போது, எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலருக்கு அரசு வேலை வாங்கி தருமாறு கேட்டோம். அதற்கு அமைச்சர் நிலோபர் கபீல், தனது உதவியாளர் பிரகாசம் என்பவரிடம் வேலை சம்பந்தமாக பேசுமாறு தெரிவித்தார்.
நானும், எனது தரப்பைச் சேர்ந்தவர்கள் பிரகாசத்தை சந்தித்து அரசு வேலை தொடர்பாக பேசினோம். அப்போது ரூ.16 லட்சம் பெற்றுக்கொண்ட பிரகாசமும், அவரது ஆதரவாளர்கள் 3 பேரும் விரைவில் அரசு வேலை வாங்கித் தருவதாக, கூறினார். ஆனால், அதிமுக ஆட்சிக்காலம் முடியும் வரை எங்களுக்கு அரசு வேலை வாங்கித் தரவில்லை. இது தொடர்பாக நிலோபர் கபீலை சந்தித்து கேட்டபோது உரிய பதில் இல்லை. பிரகாசம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் எங்களை ஏமாற்றிவிட்டார்.
அரசு வேலைக்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு பலமுறை பிரகாசத்தை சந்தித்தும் பணம் கிடைக்கவில்லை. பிரகாசத்திடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்தி நாங்கள் கொடுத்த பணத்தை மீட்டுதர வேண்டும்’’ என தெரிவித்திருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட காவல் துறை அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT