Published : 04 Jul 2023 07:52 AM
Last Updated : 04 Jul 2023 07:52 AM

முல்லைத்தீவில் கால்வாய் தோண்டியபோது எலும்புக்கூடுகள் - போரில் சரணடைந்த போராளிகளுடையதா என சந்தேகம்

முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் குடிநீர் குழாய்ப் பதிப்பதற்காக தோண்டிய கால்வாய்க்குள் காணப்படும் போராளிகளின் ஆடைகள்

ராமேசுவரம்: இலங்கை முல்லைத்தீவு அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டிய கால்வாயில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. மேலும் போராளிகள் பயன்படுத்திய ஆடைகள் கிடைத்துள்ளதால் இறுதிப் போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இலங்கையில் ராஜபக்ச ஆட்சியின்போது ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போர் 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 2013 மார்ச் 20-ம் தேதி வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாந்தை சந்தியில் இருந்து திருக்கேதீச்சரம் செல்லும் வழியில் குடிநீர்த் திட்ட குழாய்கள் அமைக்கும் பணி நடந்தது. அப்போது பணியாளர்கள் நிலத்தைத் தோண்டிய போது மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.

அதேபோல, அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஆட்சிக் காலத்தில் 2018 மார்ச் 26-ல் மன்னாரில் உள்ள சதோச விற்பனைக் கூடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிய போது மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.

தொடர்ந்து மன்னார் மாவட்ட நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆய்வு செய்ததில் மொத்தம் 342 எலும்புக்கூடுகள் கிடைத்தன. அதில் 29 சிறுவர்களுடையது.

எனினும், இந்த எலும்புக் கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பப்பட்டு நடத்தப்பட்ட கார்பன் பரிசோதனையில், அவரை 15 முதல் 17-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்தது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த 25 ஆண்டுகளில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பாக எந்தவித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என ஏற்கெனவே மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

போராளிகளின் ஆடைகள்: இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பகுதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கால்வாய் வெட்டியபோது சில மனித எலும்புக் கூடுகள், போராளிகளின் ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள் கிடைத்தன.இதையடுத்து கால்வாய் வெட்டும் பணி நிறுத்தப்பட்டு உள்ளூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொக்கிளாயில் கிடைத்த மனித எலும்புக் கூடுகள் இறுதிப் போரில் சரணடைந்த விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்றும் போராளிகள் பயன்படுத்திய ஆடைகளே கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவு அவசியம்: இதுகுறித்து விரிவாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இலங்கை அரசியல் தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என கொக்கிளாய் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x