Published : 04 Jul 2023 10:02 AM
Last Updated : 04 Jul 2023 10:02 AM

முக்கிய காய்கறிகள் விலை ரூ.100-ஐ தாண்டியது: பொதுமக்கள் திண்டாட்டம்

மதுரை: தமிழகத்தில் மட்டுமில்லாது, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளதால் அவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

பொதுவாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ் ஆகிய காய்கறிகள் விலை மட்டும் நிலையில்லாமல் இருக்கும். ஆனால், தற்போது அனைத்து காய்கறிகளும் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளன. பொதுவாக, தமிழகத்தில் உற்பத்தி குறைந்தால் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விலையைக் கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஆனால் தற்போது கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் மழை பெய்ததால் காய்கறிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாட்டு தக்காளி கிலோ ரூ.100-க்கு விற்கிறது. பெங்களூரு தக்காளி ரூ. 120 முதல் ரூ.140 வரை விற்கிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் தக்காளி விலை இன்னும் அதிகமாக விற்கிறது. கேரட் கிலோ ரூ.80, பீன்ஸ் ரூ.100 முதல் ரூ.150 வரையும், மிளகாய் ரூ.140, உருளை ரூ.55, பாகற்காய் ரூ.70 முதல் ரூ.80, பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.50-க்கு விற்கிறது.

காய்கறிகளின் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரம் விவசாயிகளுக்கு விலை உயர்வால் நன்மை இல்லை. காய்கறிகளுக்கு விலையை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு நேரடியாக விற்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இந்த திட்டத்தில், மாவட்ட வாரியாக காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான சாகுபடி செலவு கணக்கிடப்பட்டு, அத்துடன் 20 சதவீத லாபம் சேர்த்து கொள்முதல் விலையை தீர்மானித்தால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

மதுரை மாட்டுத்தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் என்.சின்னமாயன் கூறியதாவது: கோடை காலத்தில் வெயில், மழைக்கு காய்கறிச் செடிகளில் பூக்கள், பிஞ்சுகள் சரியாக பிடிக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகாவிலும் பரவலாக மழை பெய்ததால் காய்கறி வரத்து குறைந்தது. தக்காளியை பதுக்கி வைத்தும் விற்க முடியாது.

ஓரிரு நாட்களில் அழுகி விடும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிக நஷ்டம் அடைந்தனர். அப்போது அரசு தரப்பில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட வழங்க முன் வரவில்லை. தோட்டக்கலைத் துறை சரியான கணக்குகளை அரசுக்குத் தெரிவிப்பதில்லை.

அதனால், விவசாயிகள் மனம்போன போக்கில் அந்தந்த சீசனில் காய்கறிகளை உற்பத்தி செய்கிறார்கள். அவர்களையும், அவர்கள் விளை விக்கும் காய்கறிகளை கட்டுப்படுத்தவும், விலை நிர்ணயிக்கவும் அரசு தவறுவதால் இதுபோன்ற விலை உயர்வைத் தடுக்க முடியவில்லை. முன்பு, மதுரைக்கு ஒரு நாளைக்கு 16 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும்.

தற்போது 4 லாரிகளில் மட்டுமே தக்காளி வருகிறது. ஒரு லாரியில் 8 டன் தக்காளி வரும். 4 லாரிகளில் தற்போது 32 டன் மட்டுமே தக்காளி வருவதால் அதன் விலை கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது. தொடர்ந்து மைசூர் மிளகாய் வந்தும் மிளகாய் விலையும் குறையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ரோட்டில் கொட்டும்போது அரசு என்ன செய்தது?: தோட்டக்கலைத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தோட்டக்கலைத் துறைகளின் விதைகள், நாற்றுகளை வாங்கி 5 சதவீதம் விவசாயிகள் தான் காய்கறி சாகுபடி செய்கிறார்கள். மீதி 95 சதவீதம் பேர் தோட்டக்கலைத் துறை ஆலோசனை , வழிகாட்டுதல் இன்றி அவர்களாகவே விதை, நாற்று தயாரித்து காய்கறி சாகுபடி செய்து விடுகின்றனர்.

அதனால், சில நேரங்களில் உற்பத்தி அதிகமாகி காய்கறிகள் விலை குறைகிறது. அப்போது காய்கறிகளை மாட்டுக்கோ தீவனமாகவோ அல்லது சாலையிலோ கொட்டி செல்கிறார்கள். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கூட பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுப்பதில்லை எனப் புகார் உள்ளது.

நஷ்டப்படும் விவசாயிகள் கடனாளியாகி விடுகிறார்கள். அதனால், மீண்டும் காய்கறி சாகுபடி செய்ய யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. மழை, புயல் போன்ற இயற்கை காரணிகளால் சில நேரங்களில் செடிகள் அழிந்து காய்கறி உற்பத்தி குறைந்து விலை அதிகரித்து விடுகிறது. காய் கறிகள் 80 முதல் 90 சதவீதம் ஈரப்பதம் உள்ளவை. ஆனாலும், ஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.

மக்கள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிட பழக வேண்டும். அப்படி பழகி கொண்டால் இதுபோல் காய்கறி விலை ஒரேயடியாக உயராது. அவற்றின் தேவை குறைந்து விலையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x