Published : 03 Jul 2023 09:33 PM
Last Updated : 03 Jul 2023 09:33 PM

சென்னை | பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அமைச்சர் தகவல்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் உரையாற்றும் அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், பாதாளச் சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று (ஜூலை 3) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து மண்டல வாரியாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.2,115.91 கோடி மதிப்பீட்டில் 715.68 கி.மீ. மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.1,481 கோடி மதிப்பீட்டில் 379.66 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ.660 கோடி மதிப்பீட்டில் 122 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் இரண்டு கட்டங்களாக 6,720 இடங்களில் 1359,79 கிலோ மீட்டர் நீளம் உள்ள மழைநீர் வடிகாலில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு பருவமழை காலத்துக்கு முன் பணிகள் முடிக்கப்படும்.

சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 53.42 கி.மீ. நீளமுள்ள 33 நீர்வழிக் கால்வாய்களில் மிதக்கும் ஆம்பிபியன், ரொபாட்டிக் எஸ்கவேட்டர் போன்ற நவீன இயந்திரங்கள் கொண்டு ஆகாயத்தாமரை போன்ற நீர்த்தாவரங்களும், சேறு, சகதி உட்பட வண்டல்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளும் 90 சதவீதத்துக்கும் மேல் முடிவுற்றுள்ளன.

ரூ.460 கோடி மதிப்பீட்டில் 928.40 கி.மீ. நீளத்துக்கு 3,912 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.45 கோடி மதிப்பீட்டில், 64.70 கி.மீ. நீளத்திற்கு 384 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து, 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் ரூ.940.20 கோடி மதிப்பீட்டில் 1,123 கி.மீ. நீளத்துக்கு பேருந்து மற்றும் உட்புற சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கு இந்திய ஆட்சி குடிமைப்பணி அலுவலர்கள் (IAS Officers) கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில் அனைத்து நிலைகளிலும் 23,000 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் உள்ளனர். பாப்காட், ஜேசிபி ஆம்பிபியன், ரொபோடிக் எக்ஸ்கவேட்டர்கள், மர அறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், கனரக/இலகுரக வாகனங்கள் உள்ளிட்ட 1019 இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், மழைநீர்த் தேக்கம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்தில் 1913 என்ற அலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x