Published : 03 Jul 2023 04:33 PM
Last Updated : 03 Jul 2023 04:33 PM
சென்னை: “அறுவை சிகிச்சை செய்து கையை எடுக்காவிட்டால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால், 3 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது” என்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகிய விவகாரம் தொடர்பாக மருத்துவமனை டீன் தேரணி ராஜன் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "முகமது தகிர் என்பவர் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை. குறிப்பாக, 32 வாரம் இருந்தபோது அந்தக் குழந்தை பிரசவித்திருக்கிறது. பிறந்தபோது அந்தக் குழந்தையின் எடை 1.5 கிலோ. சராசரியாக குழந்தைகள் பிறக்கும்போது 2.5 கிலோ முதல் 4 கிலோ வரை இருக்க வேண்டும். பிறந்தபோதே அந்தக் குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு அதன்பிறகு வந்துள்ளது.
தேவகோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து இங்கு வந்துள்ளது. 3 மாதத்தில், குழந்தை தலையின் சுற்றளவு அதிகமானவுடன், மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. இங்கு பரிசோதனை மேற்கொண்டபோது, குழந்தைக்கு ஏற்கெனவே ரத்த உறைவு ஏற்பட்டு, அது கட்டியாக மாறி ரத்த ஓட்டம் அடைபட்டிருப்தை உறுதி செய்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு குழந்தை வரவழைக்கப்பட்டது.
அங்குக் குழந்தையின் தலையில் உள்ள நீரை வயிற்றுப் பகுதிக்கு கனெக்ட் செய்து சிகிச்சையளிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் அந்தக் குழந்தைக்கு மிகப் பெரிய ஒரு பாதிப்பு ஏற்பட்டு, கார்டியாக் அரெஸ்ட் வரை சென்றது. அதிலிருந்து அந்தக் குழந்தையை மீட்டு கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு மேலாக சிகிச்சையளித்து, மீண்டும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு சிகிச்சை முடிந்து அந்தக் குழந்தை மீண்டும் வீட்டுக்குச் சென்றது.
இந்த சிகிச்சைக்காக தொடர்ந்து குழந்தை வந்துகொண்டிருந்த நிலையில், கடந்த 29.05.23 அன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தை மீண்டும் அனுமதிக்கப்பட்டது. உடனடியாக அந்தக் குழந்தையை பரிசோதனை செய்து நியூரோ சர்ஜரி துறையினா் பரிசோதனை மேற்கொண்டனர். குழந்தைக்கு சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்றவை எடுக்கப்பட்டன. மேலும், குழந்தைக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், நியூரோ சர்ஜரி வார்டுக்கு அந்தக் குழந்தை மாற்றப்பட்டது.
அவ்வாறு மாற்றப்பட்ட பின்னர், அந்தக் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் அனைத்தும் நரம்பின் வழியாகவே கொடுக்கப்பட்டது. அந்தக் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால், ரத்தத்தின் திரவ நிலையில் மாற்றங்கள் ஏற்படுவது அந்த நோயின் காரணத்தால்தான். இதனால், ரத்த சுழற்சியில் குறைவு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கையின் நிறம் மாறியவுடன், செவிலியர் அதற்கான மருந்துகளை கொடுத்துள்ளார்.
கடந்த 1-ம் தேதி, ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய வாஸ்குலார் துறையினர் பரிந்துரை பெறப்பட்டது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அந்தக் குழந்தைக்கு கைப்பகுதியில் உள்ள ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக, அறுவை சிகிச்சை செய்து கையை எடுக்காவிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற காரணத்தால் 3 பேர் அடங்கிய உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டது.
குழந்தைகள் நல மருத்துவர், மயக்கவியல் மருத்துவர் மற்றும் நரம்பியல் மருத்துவர் ஆகியோர் அடங்கிய குழு, குழந்தையை தீவிர சிகிச்சைப்பிரிவில் இரவோடு இரவாக அனுமதித்து அடுத்த நாள் 12 மணியளவில் குழந்தையின் கை அகற்றப்பட்டு குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது. அன்றைய தினமே என்னைத் தொடர்புகொண்ட மருத்துவத் துறை அமைச்சர், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உடனடியாக மருத்துவக் குழுவை அமைத்து, விசாரணை குழுவின் அறிக்கையை தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து 3 மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெற்றோர் மற்றும் சிகிச்சையளித்தவர்களிடம் விசாரித்து நாளை (ஜூலை 4) மாலை 5 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
இதனிடையே, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தபோது, அலட்சியமாக செயல்பட்டதே கை பறிபோனதற்குக் காரணமென்று பெற்றோர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. | குழந்தையின் வலது கை அகற்றம் | “தரமற்ற சிகிச்சை வழங்கியிருந்தால் கடும் நடவடிக்கை எடுப்பீர்” - அண்ணாமலை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...