Published : 03 Jul 2023 03:27 PM
Last Updated : 03 Jul 2023 03:27 PM

‘மதுரை எய்ம்ஸ்’ என்றாலே ஒரே பதில்தான் - சோர்ந்துபோன மக்கள் பிரதிநிதிகள், ஆர்டிஐ ஆர்வலர்கள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்துக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை. | படம்: நா. தங்கரத்தினம்

மதுரை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும், இன்னும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.

தென்மாவட்ட மக்கள் மிகவும் எதிர்பார்த்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019 ஜனவரியில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது 45 மாதங்களில் (2022, செப்டம்பர்) எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு இரண்டேகால் ஆண்டுகள் கழித்து 2021 மார்ச்-சில் ஜப்பானின் ஜைக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது உடனே பணிகள் தொடங்கும் என்றனர். ஆனால், ஒன்றரை ஆண்டுகள் கடந்த பிறகும், இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. அதே நேரம் எய்ம்ஸுக்கான மாணவர் சேர்க்கை மட்டும் நடத்தப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில், மதுரை எய்ம்ஸ் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன.

தற்போது வரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி எப்போது தொடங்கும் எனத் தெரியாத நிலையால், தென் மாவட்ட மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். இதற்கிடையே தமிழகம் உட்பட மற்ற மாநிலங்களில் மருத்துவக் கட்டமைப்புகளுக்கு ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் நிதி வழங்கிய நிலையில், மதுரை எய்ம்ஸுக்கு மட்டும் நிதி ஒதுக்காதது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதன் பின்னணியில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நீடிக்கும் அரசியல் மோதல்தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இதை கடந்த வாரம் மதுரை வந்த சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

அப்போதுஅவர் கூறுகையில், `ஜைக்கா நிறுவன உதவியுடன் மதுரையில் ரூ.155 கோடியில் அரசு ராஜாஜி மருத்துவமனை கட்டிடம் கட்டப் படுகிறது. அதுபோல், கோவை, சென்னையிலும் மருத்துவக் கட்டிடங்கள் ஜைக்கா நிறுவன உதவியுடன் தடையின்றி நடக்கின்றன. ஆனால், எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்காததற்கு மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுக்காததுதான் காரணம். எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைவில் தொடங்க மத்திய அரசு சார்பில், நாங்களே ஜைக்கா நிறுவனத்திடம் பேசி வருகிறோம்' என்றார்.

இதற்கிடையே, சமூக ஆர்வலர்கள் சிலர் ஆர்.டி.ஐ மூலம் மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்திடம் எந்தத் தகவல் கேட்டாலும் 2026-ம் ஆண்டு கட்டுமானப் பணி முடியும் எனக் கூறுகிறார்களே தவிர, கட்டுமானப் பணி எப்போது தொடங்கும் எனத் தெரிவிக்கவில்லை. தென் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியும் முறையான பதில் இல்லை. இதனால், அவர்களால் எய்ம்ஸ் தொடர்பாக மக்கள் எழுப்பும் கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x