Published : 03 Jul 2023 07:41 AM
Last Updated : 03 Jul 2023 07:41 AM

சென்னை - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டம்

கோப்புப்படம்

சென்னை: சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையான சென்னை ஐசிஎஃப்-ல் தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இங்கு இதுவரை 25 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

முதல் வந்தே பாரத் ரயில், ‘ரயில் 18’ என்ற பெயரில் கடந்த 2018-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலின் சேவை புதுடெல்லி – வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்.15-ல் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட 23 வந்தே பாரத் ரயில்கள், பல்வேறு வழித்தடங்களில் தினமும் 46 சர்வீஸ்களாக இயக்கப்படுகின்றன.

தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூரு, கோயம்புத்தூர் இடையே தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல, சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையேயும், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையேயும் தலா ஒரு வந்தே பாரத் ரயிலை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வந்தே பாரத் வகை ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரித்து இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த 27-ம் தேதி ஒரே நேரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 5வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். தற்போது 24 மாநிலங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை சென்ட்ரல் - திருப்பதி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்குவதற்கான தேவை இருக்கிறது. இந்த தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க வாரியத்திடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாரியத்திடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான ஒப்புதல் கிடைக்கவில்லை, ஆனாலும், விரைவில் ஒப்புதல் கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே அதிகபட்சமாக மணிக்கு130 கி.மீ. வேகத்தில் செல்ல ரயில் பாதைகள் தயாராக உள்ளன. ரயில்வே வாரியம் ஒப்புதல் கிடைத்த பிறகு, சென்னை - திருப்பதி வந்தே பாரத் ரயிலுக்கான கால அட்டவணை, கட்டணம், பயண நேரம் உள்ளிட்ட விவரங்கள் அறிவிக்கப்படும்.

மேலும், தூங்கும் வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயிலை, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x