Published : 02 Jul 2023 11:44 AM
Last Updated : 02 Jul 2023 11:44 AM

காங்கிரஸ் நெருக்கத்தைப் பயன்படுத்தி காவிரி நீரைப் பெற்றுத்தருக: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

காவிரி டெல்டா பகுதியில் விவசாயப் பணி

சென்னை: காங்கிரஸ் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நீரை உடனடியாக பெற்றுத் தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக தீட்டப்படும் திட்டங்கள் அனைத்துமே திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டும். எவ்வித யோசனையுமின்றி, திட்டமின்றி, விளம்பரத்துக்காக சில முடிவுகள் எடுக்கப்பட்டால், அதனால் பாதிக்கப்படுவது மக்களே. எனவே, ஒரு செயலை மேற்கொள்வதற்கு முன்பு, ஒரு முடிவினை எடுப்பதற்கு முன்பு, அதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து அதற்கேற்ப திட்டத்தினை அரசு வகுக்க வேண்டும். இதுதான் ஒரு சிறந்த அரசிற்கு எடுத்துக்காட்டு. திட்டமிடலுக்கு முக்கிய காரணியாக விளங்குவது இலக்கு அல்லது குறிக்கோள். ஆனால், திட்டமிடல் என்பதே இல்லாத சூழ்நிலை திமுக ஆட்சியில் நிலவுகிறது.

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, காவேரி டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையின் நீட்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கும்பட்சத்தில், மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். அந்த வகையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்ததன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இவ்வாறு நீரினை திறந்து விடுவதற்கு முன்பு, தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் ஏற்படப் போகும் உத்தேச பருவ நிலையை கணக்கில் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். ஆனால், இதனை திமுக அரசு செய்யாமல், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி நீரினை திறந்துவிட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பாசனத்துக்கான தண்ணீரை கோடை மழை மூலமாகவும், கர்நாடகம் தண்ணீரை திறந்துவிடும் என்ற எதிர்பார்ப்பிலும், ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தில் புழுதி அடித்து நேரடி விதைப்பு பணியை டெல்டா விவசாயிகள் மேற்கொண்டுவிட்டனர். குறுவை நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நீரின்மை காரணமாக விதைகள் முளைக்காமலும்; நிலத்தடி நீர்மூலம் முளைப்பு கண்ட பயிர்கள் பாதிக்கும் நிலையில் உள்ளதாகவும்; கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை என்றும்; இந்த நிலை நீடித்தால், லட்சக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நேரடி விதைப்பு பாதிக்கப்படும் என்றும்; ஏக்கருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்துவிட்டு கவலையில் உறைந்து போயுள்ளதாகவும்; மேட்டூர் அணையிலிருந்து தற்போது திறக்கப்பட்டு வரும் நீரின் அளவை 20,000 கன அடியாக உயர்த்தினால்தான் அது வாய்க்கால்களில் ஏறிப் பாய்ந்து கடைமடைப் பகுதிகளில் வயல்வெளிகளுக்கு சென்றடையும் என்றும்; இல்லையெனில் வீணாய் சென்று கடலில் கலக்கக்கூடிய துர்பாக்கிய நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்தப் பிரச்சனை குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தினை விவசாயிகள் நடத்தியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் 9.1 டி.எம்.சி. அடி தண்ணீரையும், ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி. அடி தண்ணீரையும் கர்நாடகம் திறந்துவிட வேண்டும். ஆனால், தண்ணீரை திறந்துவிட முடியாது என்றும், காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் தண்ணீரை திறந்து விடுவது கஷ்டம் என்றும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பேசி இருக்கிறார். இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிப்பதற்கு சமம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறுகின்ற திமுக அரசு, காங்கிரஸ் கட்சியில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி கர்நாடகத்தில் இருந்து தண்ணீரைப் பெற முயற்சிக்காதது துரதிர்ஷ்டவசமானது.

கர்நாடக துணை முதலமைச்சரின் பேச்சினை கண்டிக்கக்கூட தயக்கம் காட்டுகிற அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. திமுக அரசின் திட்டமின்மை காரணமாக, பணத்தை போட்டு நேரடி விதைப்பினை மேற்கொண்ட விவசாயிகள் மனமுடைந்து இருக்கிறார்கள். திமுக அரசின் மெத்தனப் போக்குக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்மைகளை உருவாக்கி தரும் பாலமாக திராவிட மாடல் ஆட்சி விளங்குவதாக சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர், காங்கிரஸ் கட்சியில் தனக்குள்ள நெருக்கத்தினை பயன்படுத்தி, தமிழகத்துக்குரிய ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நீரை உடனடியாக பெற்றுத் தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x