Published : 23 Jul 2014 10:39 AM
Last Updated : 23 Jul 2014 10:39 AM
நான்காம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளையின் தலைவர் செளமா ராஜரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’, மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்வு செய்து 3 ஆண்டுகளாக விருதுகள் வழங்கி வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான விருது பெறும் நூல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நாவலுக்கான விருது, நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’, செ.ஏக்நாத் எழுதிய ‘கெடைகாடு’ ஆகியவற்றுக்கும் சிறந்த நாடக நூலுக்கான விருது க.செல்வராஜ் எழுதிய ‘நரிக்கொம்பு’ என்ற நூலுக்கும் வழங்கப்படுகின்றன.
புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’, ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ ஆகியவை சிறந்த சிறுகதைகள் விருதுக்கும், இரா.வினோத் எழுதிய ‘தோட்டக் காட்டீ’, ஜான் சுந்தர் எழுதிய ‘சொந்த ரயில்காரி’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் சிறந்த கவிதை விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கவிதைக்கான சிறப்பு விருது திலகபாமாவின் கவிதைத் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.
விருதுகள் வழங்கும் விழா, ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை சர் பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கு, 5.30 மணியளவில் ஜெயந்தன் எழுதி ஞாநியின் இயக்கத்தில் ‘மனுஷா மனுஷா’ என்ற நாடகம் நடைபெறும். இரவு 7 மணிக்கு விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT