Published : 02 Jul 2023 06:30 AM
Last Updated : 02 Jul 2023 06:30 AM

வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

சென்னை: வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதை சமாளிப்பதற்காக மின்கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் விண்ணப்பித்தது.

ஆணையம் உத்தரவு: இதுதொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின், கடந்தஆண்டு செப்.10-ம் தேதி முதல் மின்கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, வீடுகளுக்கு குறைந்தபட்சம் ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 முதல் அதிகபட்சமாக ரூ.11 வரை கட்டணம் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில், 2026-27-ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும் ஜுலை 1-ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதில், 2023 ஏப்ரல் மாத நிலவரப்படி உள்ள பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம் என இவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்த அளவு கட்டணத்தை உயர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம்4.70 சதவீதம் இருந்தது. எனவே,இதன் அடிப்படையில் மின்கட்டணம் 4.70 சதவீதம் வரை உயர்த்தப்பட இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் கட்டண உயர்வின் அளவை 4.7 சதவீதத்தில் இருந்து 2.18 சதவீதமாக அரசு குறைத்தது.

மேலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வீட்டுஇணைப்பு, வேளாண் இணைப்பு, குடிசை இணைப்பு, கைத்தறி, விசைத்தறிகள் போன்றவற்றுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது.

அதேசமயம் வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசாவரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மின்கட்டண உயர்வுநேற்று முதல் அமலுக்கு வந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x