Published : 02 Jul 2023 01:25 AM
Last Updated : 02 Jul 2023 01:25 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் 1,145 ஹெக்டேர் விவசாய நிலங்களை கூடுதலாக பதிவு செய்து மோசடி செய்தவர்கள் மற்றும் துணையாக இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோட்டாட்சியர்களுக்கு ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகள் நிறைந்தது திருவண்ணாமலை மாவட்டம். நெல், கரும்பு, மணிலா, உளுந்து, சிறுதானியங்கள், பயிறு வகைகள், மலர்கள் சாகுபடி அதிகளவில் உள்ளன. இயற்கை சீற்றங்கள் மற்றும் வறட்சி காலங்களில் ஏற்படும் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்குவதாக கூறி, விவசாயிகளிடம் காப்பீட்டு பிரிமீயம் தொகை பெறப்படுகிறது. ஆனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக நீடிக்கிறது.
இந்நிலையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் மிகபெரிய அளவில் மோசடி செய்திருப்பது, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(ஜுலை 1-ம் தேதி) நடைபெற்ற மாவட்ட கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பயிர் காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் மு.பெ.கிரி ஆகியோர் குற்றம்சாட்டினர்.
பயிர் சாகுபடி செய்யாமல் போலி ஆவணம் மூலமாக காப்பீடு திட்டத்தில் பிரிமீயம் தொகை செலுத்தி, இழப்பீடு பெறப்படுவதால் உண்மையான விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை கிடைக்கவில்லை என கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்து வேளாண்மை இணை இயக்குநர் ஹரக்குமார் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ததில், கூடுதலான நிலங்களை மிகைப்படுத்தி காண்பித்துள்ளனர். இவ்வாறு, கடந்த ஓராண்டில் மட்டும் 1,145 ஹெக்டேர் விவசாய நிலங்கள் கூடுதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் ஆகியோரது கூட்டாய்வு மூலமாக தெரியவந்துள்ளது. கூடுதலாக பதிவு செய்துள்ளவர்களை, காப்பீடு திட்ட பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது ஆட்சியர் பா.முருகேஷ் குறுக்கீட்டு பேசும்போது, “2 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் 3 ஏக்கர் நிலம் வைத்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலர் சாகுபடி செய்யாமலும் பதிவு செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் சான்று இல்லாமல் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய முடியாது. கூடுதலாக நிலங்களை பதிவு செய்ய சான்று வழங்கிய கிராம நிர்வாக அலுவலர்கள் விவரங்களை திருவண்ணாமலை, செய்யாறு மற்றும் ஆரணி கோட்டாட்சியர்களிடம் ஒரு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும். கோட்டாட்சியர்கள் ஆய்வு செய்து, மோசடி செய்தவர்கள் மற்றும் தவறு செய்த கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT