Last Updated : 02 Jul, 2023 12:59 AM

1  

Published : 02 Jul 2023 12:59 AM
Last Updated : 02 Jul 2023 12:59 AM

பரமக்குடி | இரவு வரை ஆள் இன்றி திறந்து கிடந்த கூட்டுறவு வங்கி - பல கோடி ரூபாய் நகைகள் தப்பின

நேற்று இரவு பூட்டப்படாமல் திறந்து கிடந்த பொட்டகவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்.  

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பொட்டகவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இரவு வரை ஆள் இன்றி கேட்பாரற்று திறந்து கிடந்தும், பல கோடி மதிப்புள்ள நகைகள் திருடு போகாமல் தப்பின என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த பொட்டகவயல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்(கூட்டுறவு வங்கி) உள்ளது. இவ்வங்கி கிராமத்தின் மையப்பகுதியான அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது. இக்கூட்டுறவு வங்கி நேற்று இரவு 8.15 மணியளவில் திறந்து இருந்ததை பக்கத்து வீட்டுப் பெண் பார்த்துள்ளார். உடனடியாக அவர் பொட்டகவயல் ஊராட்சி தலைவர் முகம்மது ஹக்கீமிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் அங்கு வந்து பார்த்தபோது அலுவலர்கள் யாரும் இன்றி வங்கி திறந்து இருந்தது.

அதனையடுத்து அவர் பரமக்குடி வட்டாட்சியர் ரவி மற்றும் ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திலிருந்து கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் முத்துகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக பொட்டகவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் நாகராஜூக்கு தெரிவித்ததையடுத்து, அவர் இரவு 9.30 மணிக்குச் சென்று வங்கியை பூட்டினார். கூட்டுறவு வங்கியின் பாதுகாப்பு அறையில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் நகைக் கடனுக்காக பெறப்பட்ட கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் உள்ளன. அவை திருடப்படாமலும், மேலும் அங்குள்ள பீரோவில் அன்றாடம் கையாளப்படும் பணமும் பாதுகாப்பாக இருந்துள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் கூறும்போது, "ஆட்சியர் அலுவலக தகவல்படி, நேற்று இரவு வங்கிச் செயலாளருக்கு தகவல் தெரிவித்து வங்கி பூட்டப்பட்டது. பொட்டகவயலைச் சேர்ந்த நாகராஜ் அவ்வங்கியின் செயலாளராக உள்ளார். மேலும் அவர் எஸ்.வி.மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். அதனால் அவர் ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரை பொட்டகவயல் வங்கியில் இருக்க வைத்துவிட்டு, எஸ்.வி.மங்கலம் சென்றுள்ளார்.

நேற்று மாலையில் அங்கிருந்த ஓய்வுபெற்ற ஊழியர் ராமநாதபுரம் பேருந்து வந்ததும், வங்கியை பூட்டாமல் கதவுகளை திறந்து வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அதனால் இரவு வரை வங்கி பூட்டப்படாமல் இருந்துள்ளது. இன்று காலை நான் உள்ளிட்ட கூட்டுறவு அலுவலர்கள் பொட்டகவயல் வங்கிக்கு சென்று ஆய்வு செய்தோம். அப்போது பீரோவில் இருந்த வங்கிப்பணம் ரூ. 88,000 அப்படியே இருந்தது. பாதுகாப்பு அறையை திறந்து நகைகளை கணக்கிடலாம் எனப் பார்த்தோம்.

அந்த பாதுகாப்பு பெட்டக அறையை வங்கி செயலாளர் மற்றும் வங்கியின் தலைவர் சேர்ந்தே திறக்க முடியும். வங்கி தலைவர் அவரது குடும்ப இறப்பு நிகழ்ச்சியால் வர முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் வரும் திங்கட்கிழமை பெட்டகத்தில் இருந்த நகைகள் அனைத்தும் ஆய்வு செய்து, சரியாக உள்ளதா? எனக் கணக்கிடப்படும். வங்கியை பூட்டாமல் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த வங்கிச் செயலாளர் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்" எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x