Published : 01 Jul 2023 11:43 PM
Last Updated : 01 Jul 2023 11:43 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினவிழா இன்று (ஜூலை 1) கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு, துணை இயக்குநர்கள் முரளி, ஆனந்தலட்சுமி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவர்கள் தங்களது பொழுதுபோக்கையும், மகிழ்ச்சியையும் தியாகம் செய்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றுகிறார்கள். எனவே, இந்த நாளை மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
புதுச்சேரியை பொறுத்தவரை எல்லா வகையிலும் மருத்துவத் துறை முன்னேற வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அரசு பொது மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்கு ஈடாகவும், அதைவிட மேலாகவும் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் செய்ய முடியும் என்பதை புதுச்சேரி நிரூபித்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் இன்னும் பல புதுமைகள் மருத்துவ துறையில் வர இருக்கிறது. குஜராத்தில் பிரதமரின் டயாலிசிஸ் திட்டம் வெற்றிகரமாக செயலாற்றி கொண்டிருக்கிறது. அந்த திட்டம் புதுச்சேரியிலும் வர போகிறது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லா மருத்துவமனைகளிலும் 10 படுக்கைகள் கொண்ட அதிநவீன ஐசியூ வரவுள்ளது.
காசநோய் இல்லா புதுச்சேரியை படைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண் பார்வை இல்லாத நிலை வரக்கூடாது என்பதற்காக அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. எல்லாவற்றிலும் மக்களுக்கு நலன் சார்ந்த துறையாக சுகாதாரத்துறை இருக்கிறது.
அதேபோல் இன்று ஜிஎஸ்டி தினமும் கூட. ஜிஎஸ்டியால் விலை உயர்ந்து விட்டது என்று ஒரு பிம்பம் உள்ளது. ஆனால், பல வரிகளை இணைத்து ஜிஎஸ்டியாக மாற்றி, இதன் மூலம் குடும்பத்தில் உள்ளவர்கள் பலன் பெறுகிறார்கள் என்பதை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
டூத்பவுடர், ஹேர் ஆயில், சோப், வாஷிங் சோப், பாலிஷ், சமையல் பொருட்கள், மூங்கிலில் செய்யப்பட்ட பர்னிச்சர்கள், காலணி, சினிமா டிக்கெட் உள்ளிட்டவற்றின் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் பலன் பெறுகிறார்கள். எனவே, மக்களுக்கு நல்லதை எடுத்து செல்வோம்.
முதல்வருடன் கலந்தாலோசித்து அடுத்தாண்டு ஜூலை 1-ம் தேதி மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தேசிய மருத்துவர் தின விழாவை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும். எல்லா துறையை சார்ந்தவர்களிடம் என்ன பிரச்சினை உள்ளது என்று பார்த்து வருகிறேன். காரைக்காலும் நம்முடைய புதுச்சேரிதான். ஆனால், மருத்துவர்கள், ஆசிரியர்கள் உட்பட யாரும் காரைக்காலுக்கு செல்வதில்லை.
இதனால் பணியிட மாற்றம் செய்யும்போது சில பிரச்சினை வருகிறது. மருத்துவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும். இடமாற்றம் என்று சொன்னவுடனே யாரையாவது பிடித்து புதுச்சேரியிலேயே இருக்கிறார்கள். இதனால் காரைக்காலில் உள்ள மக்கள் சிரமப்படுகிறார்கள்.
ஆசிரியர்கள், மருத்துவர்களை புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு அனுப்பவதில் அதிக கஷ்டமாக இருக்கிறது. காரைக்கால் பகுதி மக்களுக்கும் நாம் சேவை செய்ய வேண்டும். எனவே, இடமாறுதலில் விதிகளை மாற்றி, அங்கும் மருத்துவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக சென்று பணியாற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 4 ஆண்டுகளாக ஊதியம் கொடுக்கவில்லை என சில எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது கூட ஊதியம் கொடுக்கவில்லை. நான் ஆளுநராக வந்தபிறகு ஒவ்வொரு துறையிலும் உள்ள பிரச்சினைகளை பார்த்து சரி செய்து வருகிறேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT