Published : 01 Jul 2023 08:38 PM
Last Updated : 01 Jul 2023 08:38 PM
சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பவுர்ணமி தினங்களில் சுவாமி தரிசனம் செய்திட சிறப்பு தரிசனக் கட்டண முறையை முழுமையாக ரத்து செய்து, அனைத்து பக்தர்களும் பொது தரிசனத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்திட இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திகழ்கிறது. இங்கு ஈசன் மலை உருவில் ஜோதி வடிவிலேயே அருள் பாவித்து வருகின்றார். இத்திருகோயிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமியின் அருள் பெற்று செல்கின்றனர்.
திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தந்திடும் வகையில் திருக்கோயில் நிர்வாகமானது மாவட்ட நிர்வாகம், திருவண்ணாமலை நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற பல்வேறு துறைகளுடன் இணைந்து திருக்கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதை பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறை வசதிகள், தேவையான இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு உடனுக்குடன் தூய்மைப்படுத்துதல், மருத்துவ மையங்கள், தற்காலிக பேருந்து நிலையங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி தந்து வருகிறது.
மேலும், தமிழக முதல்வர், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் செயல்படுத்தப்பட்டு வந்த அன்னதானத் திட்டத்தை முழு நேர அன்னதானத் திட்டமாக செயல்படுத்திட ஆணையிட்டு, அதனை கடந்த 31.12.2022 அன்று தொடங்கி வைத்தார். மேலும் இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திடும் வகையில் ரூபாய் 78 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டம் வரைவு (மாஸ்டர் பிளான்) தயாரிக்கப்பட்டு, செயல்படுத்திடும் வகையிலான பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2023-24 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளின்படி, கிரிவலப் பாதையில் புகழ்பெற்ற 10 திருக்கோயில்களின் பிரசாதங்கள் பக்தர்களுக்கு கிடைத்திடும் வகையில் பிரசாத கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயிலில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. திருவண்ணாமலைக்கு விழா காலங்கள் மற்றும் பவுர்ணமி நாட்களில் வருகை தரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தந்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சிறப்பு ரயில்களை இயக்கிட மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் தென்னக ரயில்வேக்கு கருத்துருக்களை அனுப்பி நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோயிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.50-ன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்த நிலையில் பக்தர்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து, பொது தரிசனத்தின் மூலமாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விரைவாக தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT