Published : 01 Jul 2023 08:45 PM
Last Updated : 01 Jul 2023 08:45 PM
சென்னை: "சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இன்று வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில பகுதிகள் மிச்சம் இருக்கிறது. இப்பணிகள் நடைபெற்று வரும் காரணத்தாலும், மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வரும் காரணத்தாலும் சில சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ரூ.69.78 கோடி செலவில் திரு.வி.க. நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள “செங்கை சிவம் பாலம்”, கொளத்தூரில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கவுதமபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "இந்த பெரம்பூர் பகுதியிலே, சட்டமன்ற உறுப்பினராக இரண்டுமுறை இத்தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியிருக்கக்கூடிய செங்கம் சிவம் பெயரை சூட்டலாம் என்று நான் கூறினேன். உடனடியாக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டனர். அவரது பெயரில் அமைந்துள்ள இந்த பாலத்தின் திறப்பு விழாவில் பங்கேற்பதில் நான் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஓரிரு மாதங்களுக்கு முன்பு, திறக்கப்பட்ட பாலத்துக்கு சிட்டிபாபு பெயர் சூட்டப்பட்டது. இப்படி பல்வேறு பாலங்களுக்கு தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில், இதே சென்னை மாநகரத்தில் பல்வேறு பாலங்கள், சுரங்கப்பாதைகள், கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டபோது, திராவிட இயக்கத்துக்காக உழைத்த தியாகச் செம்மல்களின் பெயர்களை சூட்டியிருக்கிறார். அதனடிப்படையில்தான், இந்த பாலத்துக்கு செங்கை சிவத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சென்னையை நீங்கள் சுற்றிப்பார்த்தால், நீங்கள் பார்க்கக்கூடிய பெரும்பாலானவை, திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் உருவாக்கப்பட்டது. அண்ணா சாலையில், ஒருகாலத்தில் ஜெமினி சர்க்கிள் என்றழைக்கப்பட்ட இடம், இன்றைக்கு அண்ணா மேம்பாலம் என்று சொல்லுமளவுக்கு கருணாநிதி அந்த இடத்தில் உருவாக்கினார். அதற்கு அண்ணா மேம்பாலம் என்று பெயர் சூட்டினார். இன்றுடன் அந்த பாலம் 50 ஆண்டுகால வரலாற்றைப் பெற்றிருக்கிறது.
அதேபோல், கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம், செம்மொழிப் பூங்கா, வள்ளுவர் கோட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்,டைடல் பார்க், ஓமந்தூரார் மருத்துவமனையை தலைமைச் செயலகமாக அமைய வேண்டும் என்று கருணாநிதி பார்த்துப்பார்த்து கட்டினார். அது அரசியல் சூழ்நிலை காரணமாக மாற்றப்பட்டது. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. இது அரசு நிகழ்ச்சி.
அதேபோல், மெட்ரோ ரயில் திட்டம் திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டு, இன்று வெளிநாடுகளோடு போட்டிப்போடும் அளவுக்கு அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் சென்னையின் தேவையை தீர்த்துவைத்தவர் இன்று நூற்றாண்டு விழா காணும் தலைவர் கருணாநிதி. 50 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கட்டிய அண்ணா மேம்பாலம்தான், இன்று அரை நூற்றாண்டு விழா கண்டிருக்கிறது. வாழ்ந்து மறைந்தபிறகு, பயன்தரக்கூடிய எத்தனையோ நல்ல பல திட்டங்களை, நமக்காக இன்றைக்கும் உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கக்கூடியவர்தான் கருணாநிதி.
அவருடைய வழித்தடத்தில்தான் திராவிட மாடல் ஆட்சி, இன்றைக்கு சிறப்போடு நடந்துகொண்டிருக்கிறது. சென்னையின் மேம்பாட்டுக்காக ஏராளமான திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மாநகரப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டு, வெள்ளம் வரும்போதெல்லாம் மக்கள் எந்தளவுக்கு துன்பப்படுகிறார்கள், துயரப்படுகிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில், அந்த வெள்ள நீரைத் தடுப்பதற்காக, ரூ.3,184 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பணிகள் அதனுடைய பயனாக சென்ற ஆண்டு சென்னை மாநகரம், வெள்ளத்தில் இருந்து எப்படி காப்பாற்றப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். முன்பெல்லாம் மழை பெய்தால், எங்கே பார்த்தாலும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும், வீட்டுக்குள் தண்ணீர் இருக்கும், மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்போம். அங்கு அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவோம். இது ஒவ்வொரு மழை காலத்திலும் வழக்கமாக இருந்து வந்தது. அந்த நிலையை மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் இன்று வேகவேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில பகுதிகள் மிச்சம் இருக்கிறது. இப்பணிகள் நடைபெற்று வரும் காரணத்தாலும், மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வரும் காரணத்தாலும் சில சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. அந்த சாலைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் விரைவில் சரிசெய்யப்பட வேண்டும். அதை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றும், நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.
அதேபோல், சென்னை மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பூங்காக்களை அழகுபடுத்திட, மேம்படுத்திட கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.124 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் குடும்பத்துடன் சென்று அங்கு பொழுதை கழிக்கும் இடமாக பூங்காக்கள் மாற்றம் பெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே இந்த உயர் மட்ட பாலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களுக்கு இது மிகமிக அவசியமான பாலம்" என்று முதல்வர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT