Last Updated : 01 Jul, 2023 07:01 PM

1  

Published : 01 Jul 2023 07:01 PM
Last Updated : 01 Jul 2023 07:01 PM

நாமக்கல்லில் கிணற்றில் விழுந்த மாணவர் உள்பட 4 பேர் உயிரிழப்பு: மகனைக் காப்பாற்றி தந்தை இறந்த சோகம்

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள்.

நாமக்கல்: ராசிபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவர்கள் 3 பேரை காப்பாற்ற முயன்ற தந்தை உள்பட 4 பேர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா, நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா கணவாய்பட்டியை சேர்ந்த குப்புசாமி மகன் அபினேஷ் (15), கம்மாளப்பட்டி கண்ணன் மகன் நித்தீஷ்குமார் (15), சமத்துவபுரம் பொன்னுசாமி மகன் விக்னேஷ் (13). இதில் அபினேஷ், கண்ணன் ஆகிய இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பும், அதே பள்ளியில் விக்னேஷ் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

விடுமுறை நாளான சனிக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒரே இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளனர். இரு சக்கர வாகனத்தை அபினேஷ் ஓட்டி சென்றார். அப்போது அங்கு சாலையோரம் இருந்த 100 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் தவறி விழுந்தனர். அவர்களுக்கு பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த அபினேஷ் தந்தை குப்புசாமி (58), கணவாய்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (38), சரவணன் (35) ஆகிய 3 பேரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர்களை காப்பற்ற 3 பேரும் கிணற்றில் குதித்துள்ளனர். இதில் அபினேஷ், நித்தீஷ்குமார் ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். எனினும், விக்னேஷை மீட்க இயலவில்லை. தவிர, அவரைக் காப்பாற்ற முயன்ற குப்புசாமி, அசோக்குமார், சரவணன் 3 பேரும் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ஆயில்பட்டி போலீஸார், ராசிபுரம் தீயணைப்புறையினர் உதவியுடன் கிணற்றில் மூழ்கி 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் 4 பேரும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக, ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் விழுந்த பள்ளி மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தந்தை உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படு்த்தி உள்ளது.

இதனிடைய, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x