Published : 01 Jul 2023 11:45 AM
Last Updated : 01 Jul 2023 11:45 AM
ஈரோடு: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நல பாதிப்பு மற்றும் கைது நடவடிக்கையை தொடர்ந்து, அவர் வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டது.
‘திமுக ஆட்சி அமைந்தவுடன், முதல்வர் குடும்பத்துடன், ‘ஜி ஸ்கொயர்’ நிறுவனத்தை தொடர்புபடுத்தி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை எழுப்பி பரபரப்பு ஏற்படுத்தினார். அப்போது, துறை அமைச்சரான முத்துசாமி, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, அரசின் முடிவுகளில் எந்த பாரபட்சமும் இல்லை என தெளிவுபடுத்தி, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இத்தகைய அனுபவம் கொண்ட முத்துசாமி வசம், டாஸ்மாக் நிர்வாகத்தை ஒப்படைத்ததன் மூலம், ‘கிளீன் இமேஜ்’ பெற விரும்புகிறார் முதல்வர்’ என்கின்றனர் திமுகவினர். மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள உள்துறை செயலாளர் அமுதா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன், தொழிற்சங்க நிர்வாகிகள் இந்த மூவரின் கூட்டணியோடு, அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் நிர்வாகத்தில் புதிய செயல்திட்டங்களை வகுத்து வருகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.
மாநிலம் முழுவதும் முறைகேடாக இயங்கிய பார்கள் மூடப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபானக் கடைகள், பார்கள் இயங்குவதும், மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்வதும் தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதை கண்காணிக்க வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அடங்கிய புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்ற கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள். அமைச்சர் முத்துசாமியை பொறுத்தவரை, டாஸ்மாக் பணியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த சீர்திருத்தத்தையும் மேற்கொள்ள முடியாது என்று நம்புகிறார்.
இதற்காக, பாரபட்சமில்லாமல், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து மணிக்கணக்கில் பேச்சு நடத்தியுள்ளார். இதில், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு, கடை வாடகை, மின் கட்டணம், இறக்கு கூலி, உடைந்த பாட்டில்களுக்கான செலவு, ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கான செலவு, ஆளுங்கட்சியினரின் வசூல் வேட்டை என பல பிரச்சினைகளை டாஸ்மாக் பணியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
இதற்கு தீர்வு கண்டால் மட்டுமே, சரியான விலையில் மது விற்பனையாகும் நிலை ஏற்படும் என தெளிவுபடுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் முத்துசாமி நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் இதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதில், டாஸ்மாக் கடைகளின் இட வசதியை அதிகப்படுத்துதல், மூடப்பட்ட முறைகேடான பார்களுக்கான புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளுதல், நீதிமன்ற வழக்குகளைக் கையாளுதல், 90 மில்லி அளவில் மதுபானங்களை, ‘டெட்ரா பேக்’ மூலம் விற்பனை செய்தல் குறித்து விவாதிக்கப் பட்டதாக தெரிகிறது.
மேலும், காலி பாட்டில் பிரச்சினை, கேரள மாநிலத்தைப்போல், ‘மதுபானங்களை கையாளும் படி’ வழங்குதல், பில் போட்டு மதுபான விற்பனை போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ரூ.294 கோடியில், டாஸ்மாக் நிர்வாகத்தை கணினிமயமாக்குவதற்காக வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த பணிகளை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்த பட்டியல் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலின் பேரில், ஜூலை 1-க்கு (இன்று) பிறகு, டாஸ்மாக் தொடர்பாக, பல புதிய அறிவிப்புகள் வெளிவரவுள்ளது என்கிறது அதிகாரிகள் தரப்பு.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க (ஏஐடியுசி) தலைவர் தனசேகரன் கூறும்போது, ‘நிர்வாகசெலவுகளை கொடுத்து, பணியாளர்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் அதிக விலைக்கு மது விற்பனை என்ற குற்றச்சாட்டுக்கே இடமில்லாமல் போய்விடும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT