Published : 01 Jul 2023 04:47 AM
Last Updated : 01 Jul 2023 04:47 AM

புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றார் சிவ்தாஸ் மீனா - டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்பு

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா.

சென்னை: தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு நேற்றுடன் ஓய்வு பெற்றதை அடுத்து, தமிழக அரசின் 49-வது தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார். சைலேந்திர பாபு ஓய்வு பெற்றதை தொடர்ந்து, தமிழக டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றார். சென்னை பெருநகர காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்றுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2021-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது. முதல்வர் ஸ்டாலின் மே 7-ம் தேதி பொறுப்பேற்ற நிலையில், அன்றே தலைமைச்செயலராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு புதிய தலைமைச் செயலராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். கடந்த 2 ஆண்டுகள் தலைமைச் செயலராக பணியாற்றிய இறையன்பு நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைமைச் செயலராக கடந்த 1989 பிரிவு ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை செயலராக இருந்த ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட சிவ்தாஸ் மீனா நியமிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

நேற்று மாலை 5 மணிக்கு தலைமைச் செயலராக இருந்த வெ.இறையன்பு பணியில் இருந்து பிரியா விடை பெற்ற நிலையில், புதிய தலைமைச்செயலராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்றார். அவரிடம்பொறுப்புகளை இறையன்பு ஒப்படைத்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அனைத்து அதிகாரிகளிடமும் விடை பெற்று புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, நேற்று காலை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, ‘இந்து தமிழ் திசை’ வெளியீடான ‘மாபெரும் தமிழ்க்கனவு’ நூலை முதல்வரிடம் அளித்து வாழ்த்து பெற்றார்.

டிஜிபியானார் சங்கர் ஜிவால்: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நேற்றுடன் ஓய்வு பெற்றார். அந்த பணியிடத்துக்கு சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், டிஜிபி அலுவலகத்தில் 31-வது டிஜிபியாக சங்கர் ஜிவால் நேற்று மதியம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பொறுப்புகளை சைலேந்திர பாபு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்ட சங்கர் ஜிவாலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக டிஜிபி சங்கர் ஜிவால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர்: சென்னை பெருநகர புதிய காவல்ஆணையராக நியமிக்கப்பட்ட சந்தீப்ராய் ரத்தோர் நேற்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

முன்னதாக தனது பொறுப்புகளை சங்கர் ஜிவால், அவரிடம் ஒப்படைத்தார். புதிய காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோருக்கு சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா (தெற்கு), லோகநாதன் (தலைமையிடம்), கபில் குமார் சி.சரத்கர் (போக்குவரத்து) மற்றும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x