Last Updated : 01 Jul, 2023 02:55 PM

 

Published : 01 Jul 2023 02:55 PM
Last Updated : 01 Jul 2023 02:55 PM

டாஸ்மாக் கடை வளாகம், தெருக்கள், நடைபாதைகளை ஆக்கிரமித்த பொதுவெளி ‘குடி’மகன்களால் இடையூறு

சென்னை: ரயில், பேருந்து நிலையங்கள் போல எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஓர் இடம்தான் டாஸ்மாக் கடைகள் இருக்கும் பகுதிகள். மாலை 6 மணிக்கு மேல் திருவிழாபோல கூட்டம் கூடுகிறது. நடு வீதியில் நின்றபடி குடிமகன்கள் மது அருந்துகின்றனர். இது பெண்களுக்கும், சிறார்களுக்கும் இடையூறை ஏற்படுத்துகிறது.

சென்னை உள்ளிட்ட நகர்புறங்களில் தற்போது பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கடைக்கு அருகிலேயே சாலைகளிலும், தெருக்களிலும் நின்று கொண்டுசாவகாசமாக மது அருந்துகிறார்கள். சாலையில் செல்லும் பொதுமக்களைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. இதனால் பெண்களும் குழந்தைகளும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

பொதுவெளியில் மது அருந்துவதை பார்க்கும் சிறுவர்களும் கூடகுடி பழக்கத்துக்கு ஈர்க்கப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் குடிமகன்களுக்கு அந்த கவலை எல்லாம் இல்லை. பலர் குடித்துவிட்டு அங்கேயே வாந்தியும் எடுத்து சுகாதார சீர்கேட்டுக்கும் வழிவகுக்கின்றனர்.

சென்னையில் மயிலாப்பூர் கால்வாய்க்கரை சாலை, சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலை, மடிப்பாக்கம் யுடிஐ பேருந்து நிலையம் அருகில், எழும்பூர், அண்ணா சாலை, சேப்பாக்கம், வேளச்சேரி 100 அடி சாலை, நாராயணபுரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வடசென்னையின் அநேக பகுதிகளிலும் சாலைகளில் நின்றபடி மதுக்குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மயிலாப்பூரை பொருத்தவரை ரயில் நிலையம் அருகில் 3 மதுபான கடைகளும், 3 பார்களும் இயங்கி வந்தன. பார்கள் இருக்கும் போதே அந்த பகுதியில் ஏராளமானோர் பொது வெளியில் நின்று மது அருந்தி கொண்டிருப்பார்கள். தற்போது 500 கடைகள் மூடப்பட்டதில், மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த 2 மதுபான கடைகள் மூடப்பட்டு, ஒரே ஒரு கடை மட்டுமே திறக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் பார்களும் மூடப்பட்டதால் பொது இடத்தில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மது குடிப்பவர்கள் மதுபாட்டில்களையும், உணவு கழிவுகளையும் அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். மேலும் சிலர் மதுபாட்டில்களை கிரிக்கெட் பந்து போல வீசி எறிந்து உடைத்துவிட்டு செல்கின்றனர்.

இது வெறும் காலுடன் நடப்பவர்களை பதம்பார்க்கிறது. இதுபோன்ற அட்டூழியங்களால் பல பகுதிகள் குப்பை கூழங்களாக காட்சி அளிக்கின்றன. மது பழக்கத்தால் பாதிக்கப்படும் பல குடும்பங்கள் இதற்கு எப்போது தான் நிரந்தர தீர்வு கிடைக்கப்போகிறதோ என ஏக்கத்துடன் காத்திருக்கின்றன.

சூளைமேட்டை சேர்ந்த தனியார் நிறுவனஊழியர் பாலமுருகன் கூறும்போது, ‘நெல்சன்மாணிக்கம் சாலையில் உள்ள மதுக்கடை உட்பட பல மதுக்கடைகள் முன்பு தினமும் ஏராளமானோர் நடைபாதையில் உட்கார்ந்து மது குடிக்கின்றனர். குடித்துவிட்டு அங்கேயே படுத்து விடுகின்றனர். அவர்கள் சாலையில் படுத்து கிடக்கும் அலங்கோல காட்சி, அப்பகுதியில் நடந்து செல்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.

மேலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு செயல்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். எனவே, பொதுவெளியில் நின்று மதுக்குடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

மயிலாப்பூரை சேர்ந்த சரவணன் கூறும்போது, ‘முன்பெல்லாம், யாராவது ஓரிருவர் சாலையில் நின்று மதுஅருந்தி கொண்டிருப்பார்கள். ஆனால், சமீப நாட்களாக சாலையோரத்திலும், தெருக்கள், நடைபாதைகளிலும் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு பலரும் மது அருந்துகிறார்கள். அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் எங்கள் வீட்டு பெண் குழந்தைகள் ஒரு வித அச்சத்துடனே செல்ல வேண்டியுள்ளது.

எனவே, இதுபோன்றுபொது வெளியில் நின்று மது அருந்துபவர்களின் செயல்களுக்கு தமிழக அரசும், காவல்துறையும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது முடியவில்லை என்றால், பார்கள் திறக்கும் வரை மதுக்கடைகளையும் மூட வேண்டும்’ என்றனர்.

போலீஸ் குழுக்கள்: இது குறித்து காவல்துறை துணை ஆணையர் ராஜ்வாத் சதுர்வேதி கூறும்போது, டாஸ்மாக் கடைகள் அருகில் சாலையில் நின்று மதுக்குடிப்பவர்களை கண்காணிக்க போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில், இந்தக் குழுக்கள் சென்று, பொதுமக்களுக்கு இடையூறாக நின்று மதுக்குடிப்பவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்து வருகிறது’ என்றார்.

டெண்டர் தொடர்பான பிரச்சினையால் சில நாட்களாக தமிழகம் முழுவதும் பார்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 4,829 மதுபான கடைகள் இருந்தன. தற்போது அதில் 500 கடைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல், தமிழகம் முழுவதும் 3,450 பார்கள் இயங்கி வந்தன.

இதில் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்த 1,800 பார்கள் மூடப்பட்டுள்ளன. சென்னை மண்டலத்தில் 800 பார்களும் சென்னையில் மட்டும் 350 பார்களும் அனுமதி இல்லாமல் இயங்கி வந்த நிலையில் மூடப்பட்டுவிட்டன. பார்களை திறக்கக்கூடாது என்ற உத்தரவு இருந்தும், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சில மதுபான கடைகளில் பார் உரிமையாளர்கள் காவல்துறை மற்றும் அதிகரிகளின் ஆசியோடு, சட்டவிரோதமாக பார்களை நடத்தி வருவதாக தெரிகிறது.

ஆனால் நடவடிக்கை என்று வரும்போது பார் உரிமையாளர்களை விட்டுவிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் மீதுதான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். எனவே, அதிகாரப்பூர்வமாக பார்களுக்கான டெண்டர் அறிவித்து இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் நின்று மதுக்குடிப்பதையும் தடுக்கலாம். இவ்வாறு கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x